வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:03:54 (21/07/2018)

ஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம்!

ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடிகாட்டிய தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருப்புக்கொடி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று அதிகாலை ரயில் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார்மூலம் புதுக்கோட்டை சென்ற ஆளுநர் புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தங்கியிருந்து,  புதுக்கோட்டையில்  அரசுப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை முதல் ஆய்வு நடத்திய ஆளுநர் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சியை கொள்கைக்கு எதிராக இருப்பதாக பிரதான எதிர்கட்சியான தி.மு.க, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் புதுக்கோட்டை மகளீர் கல்லூரி மைதானம் அருகே  ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்றனர்.எதிர்க்கட்சிகளின் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததுடன், தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்து, சிறையில் அடைப்போம் என எச்சரித்தார்கள். அதையும் மீறி புதுக்கோட்டை மாவட்ட திமுக பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி, அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், சண்முகம் என 1500-க்கும் மேற்பட்ட திமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள்  போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

அதில் சுமார் 550க்கும் மேற்பட்டோர் மட்டும்  கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை நகரில் உள்ள 3 நகர திருமண மண்டபங்களில் காலையிலிருந்து அடைக்கப்பட்டார்கள்.மேலும் காலையிலிருந்து அரசு பணிகளை ஆய்வு செய்த ஆளுநர் மாலை 5 மணிவரை புதுக்கோட்டையில் இருந்தார். ஆளுனருக்கு எதிராக போராடியவர்களை மாலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஆய்வுகள் முடிவு முடிந்தும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சித் தொண்டர்கள் விடுதலை செய்யப்படாமல் தற்போதுவரை மண்டபங்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட தர வில்லை என்றாலும் இரவு நெடுநேரமாகியும் உணவு வழங்க வில்லை என திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஜனநாயகப்படி போராடினால் போராடியவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குகள் போடுவதற்காக காவல்துறையினர் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், நள்ளிரவில் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.ஆளுநருக்கு எதிராக போராடினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை என கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது அதற்கு எதிராக திமுக கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் நடந்த கவர்னர் வருகைக்கு எதிராக போராடிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நள்ளிரவுவரை விடுதலை செய்யாமல் இரவில் சிறையில் அடைக்க காவல் துறை ஏற்பாடு செய்வது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க