வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (21/07/2018)

கடைசி தொடர்பு:04:30 (21/07/2018)

ஜூலை 25-ம் தேதி இன்ஜினீயரிங் கலந்தாய்வு - அமைச்சர் அறிவிப்பு! 

``பொது பிரிவினருக்கான இன்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை மாதம் 25-ம் தேதி தொடங்கப்படும்” என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன். அறிவித்துள்ளார்

இன்ஜினீயரிங் கலந்தாய்வு

மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்னர் பொறியியல் கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறாக இருந்ததால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, `தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்குக் கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தது. இதனால் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள நிர்வாக இடங்களுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் ஆகஸ்ட் 31-ம் தேதி  வரை பொறியியல் கலந்தாய்வை நடத்த அனுமதி பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். 

மதுரை மேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ``ஜூலை 25-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது” என்று அறிவித்துள்ளார். மேலும், ``ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் இறுதிக்குள் பொறியியல் கலந்தாய்வு முடிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் முதலாம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்குவது வழக்கம்.  ஆனால் இந்த ஆண்டு மருத்துவம், வேளாண்மை, கால்நடை போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிந்த பின்பு பொறியியல் கலந்தாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்பு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தால், பொறியியல் படிப்புக்கான இடம் காலியிடம் ஏற்படுவதைத் தவிர்க்க, கலந்தாய்வைக் கால தாமதமாகத் தொடங்க முடிவு செய்திருந்தோம். உச்சநீதிமன்றமும் ஆகஸ்ட் 31 தேதி வரை கலந்தாய்வை நடத்த அனுமதி வழங்கி இருக்கிறது. பொறியியல் கலந்தாய்வில் 1.78 லட்சம் இடங்கள் உள்ளன. ஆனால், கலந்தாய்வில் கலந்துகொள்ள ஏற்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1.04 லட்சம் மட்டுமே. இதனால் விண்ணப்பித்த அனைவருக்குமே பொறியியல் படிப்புக்கான வாய்ப்பு உள்ளது. 5 கட்டமாக இந்த பொறியியல்  படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறும்.இதனை தொடர்ந்து 2 நாட்கள் துணை கலந்தாய்வு கூட்டமும் நடைபெறும். இதற்காக அந்தந்த மாவட்ட தலைமையில்  42 சேவை மையங்கள் ஆரம்பிக்கபட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள், மாணவர்களுக்கு சிரமங்கள் குறைக்கப்படும்' என்று அவர் தெரிவித்தார்.