வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (21/07/2018)

கடைசி தொடர்பு:06:30 (21/07/2018)

குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்!

கரூர் மாவட்டத்தில் உள்ள மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட புகளுர் வாய்க்கால் பகுதிகளில் தூர் வாரப்பட்ட பணி மற்றும் தூர் வாரப்பட்டு வருகின்ற பணிகளையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அமைச்சர்

கரூர் மாவட்ட காவிரி ஆற்றுப் பகுதியிலுள்ள நீர்வழிப்பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது வேளாண்மைத்துறையின் கூடுதல் செயலாளர் கருணாகரன், மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த ஆய்வின்போது,பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ அரசு, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் கண்மாய்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வழிப்பகுதிகளை துர்வார வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும்  துணை முதலமைச்சர், உத்தரவிட்டதன் அடிப்படையில் பணிகள் தமிழகம் முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.

இப்பணிகளை கண்காணிக்க இந்திய ஆட்சிப்பணி நிலையிலுள்ள 11 அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் நியமித்துள்ளார். அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில், திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பாசன வாய்க்கால்கள், வடிகால் வாரிகள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு ரூ.2.32 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் கோட்டமேடு பகுதி காட்டுவாரி வாய்க்கால், லாலாபேட்டை பகுதி, மருதாண்டான் வாய்க்கால், நச்சலூர் பகுதி பனைவாலீஜீ வாய்க்கால், வலையபட்டி பகுதி வலையபட்டி, வாய்க்கால், வதியம் வாய்க்கால், நெரூர் (தெற்கு மற்றும் வடக்கு) பகுதி நெரூர் வாய்க்கால், சிந்தலவாடி பகுதி பிள்ளபாளையம் வழிவணை, உப்பிடமங்கலம் குளம், கோம்புபாளையம் நஞ்சைபுகளுர் பகுதி புகளுர் வாய்க்கால், தோட்டக்குறிச்சி வாங்கல் வாய்க்கால், மேட்டுமகாதானபுரம் தடுப்பணை, உள்ளிட்ட பகுதிகளில் 95.52 கிலோமீட்டர் தொலைவிற்கு நீர்வழிப்பாதைகள் போர்க்கால அடிப்படையில் தூர்வாரப்பட்டு வருகின்றது. இதன் மூலம் 14,394 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று பயன்பெறும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் கரூர் மாவட்டத்தில் எல்லா பக்கங்களுக்கும் செல்லும் வகையில் அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்படுகின்றது" என்றார்.