தஞ்சையில் புறவழிச்சாலை: அரசுக்கு மாற்று யோசனை கூறிய விவசாயிகள்!

 தஞ்சாவூரில் அமைக்கப்படும் புறவழிச்சாலையால், விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்றி அமைக்குமாறு கலெக்டர் அண்ணாதுரையிடம் விவசாயிகள்  மனு கொடுத்தனர்.

 

விவசாயிகள்

திருவையாறு அருகே ஒன்பத்துவேலி, மைக்கேல் பட்டி கிராமத்தில் 100-க்கும் அதிகமான சிறு, குறு விவசாயிகள் விவசாயம் செய்து  வருகின்றனர்.  தஞ்சாவூரில் புறவழிச்சாலை அமைக்க நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்று கூறி, கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். அந்த மனுவில், ``இந்த நிலங்கள் அனைத்தும் எங்களது பரம்பரைச் சொத்தாகும். விவசாயமே எங்களது வாழ்வாதாரம். நிலத்தில் கிடைக்கும் நீரைக்கொண்டு விவசாயம் செய்யும் நன்செய் நிலம் ஆகும். இந்த நிலையில், உலக வங்கி  உதவியுடன் 1 கோடி மதிப்பில் குடமுருட்டி ஆற்றில் உயர்மட்டக் கால்வாய் கட்டப்பட்டு, அந்த நீர்ப்பாசனம்மூலம் நிலங்கள் பயன்பெறுகின்றன. விவசாயம் நிறைந்த இந்தப் பகுதி வழியாக புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை நிலங்களைக் கையகப்படுத்தி அடையாளக் கற்களை ஊன்றியுள்ளனர். எனவே, இந்த புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தை மாற்றி அமைக்க வேண்டும். மேலும், மாற்றுப்பாதையாக திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர் சாலையில் மைக்கேல்பட்டிக்கு கிழக்கே உள்ள கண்டமங்கலம் ஊராட்சிக்குச் செல்லும் தார்ச்சாலை வழியாக பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான கோணங்கடுங்காலார் என்ற வடிகால் வாய்க்காலின் வலதுபுறக் கரையின் வழியாக திருக்காட்டுப்பள்ளி-பூதலூர் சாலையில் புறவழிச்சாலையை அமைக்கலாம். அப்படி புறவழிச்சாலை அமைத்தால், செலவும் குறையும், கண்டங்கலம், வரகூர், அம்மையகரம், அள்ளூர், அரசகுடி, கடம்பங்குடி உள்ளிட்ட கிராம மக்களுக்கும் பயன் கிடைக்கும். மேலும்  விவசாய விளை நிலமும் பாதுகாக்கப்படும். எனவே, இந்த புறவழிச்சாலையை விவசாய நிலம் பாதிக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டும்' என்று  தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!