கரை இல்லாத ஆறா? - அதிகாரிகளின் விளக்கத்தைக் கேட்டு பிரமித்த நீதிபதிகள்!

'கரையே இல்லாத ஆறு' என்று கூறிய தமிழக அரசு அதிகாரியின் விளக்கத்தைக் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரமிப்படைந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம்

 

அனகாபுத்தூர் மூகாம்பிகை நகரில் வசித்துவந்த 500-க்கும் மேற்பட்டவர்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, குமுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலத்துக்கு அருகில், அடையாறு ஆற்றங்கரையை ஆக்கிரமித்து (காசா கிராண்ட்) தனியார் கட்டுமான நிறுவனம், 11 மாடி குடியிருப்புக் கட்டடம் கட்டுவதுகுறித்து நீதிபதிகள் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, கட்டடத்துக்கு அனுமதியளித்த அதிகாரிகளை ஆஜராகும்படி, நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.  அதன்படி, நீர்வள ஆதாரத் துறையில் ஓய்வுபெற்ற பொறியாளர் பக்தவச்சலம் ஆஜரானார். அப்போது, வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள இடத்தில் எப்படி 11 மாடி கட்டடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அதிகாரி,ஆறடி அளவில் கட்டுமான நிறுவனம் சுவர் எழுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த பதிலால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், தெற்குக் கரையை உயர்த்தினால் வடக்குக் கரை பக்கம்தானே தண்ணீர் ஏறும் என்று கேட்டதற்கு, சைதாப்பேட்டை பகுதியில் அடையாற்றில் கரையே இல்லை என அதிகாரி பதிலளித்தார். `கரையே இல்லாத ஆறா'? என நீதிபதிகள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர்,  2015ல் 10 நாள் இடைவெளியில் கட்டுமான நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக்  குற்றச்சாட்டுகள் கூறப்பட்டதால், அது சம்பந்தமாக விளக்கம் அளித்து, தனித்தனியாக பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல்செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!