வெளியிடப்பட்ட நேரம்: 07:46 (21/07/2018)

கடைசி தொடர்பு:11:57 (21/07/2018)

ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்!

ஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்!

டப்பாடி பழனிசாமி அரசு தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறது. எதிர் கருத்து கொண்டோரை எல்லாம் கைது செய்கிறது’ என்ற மக்களின் கோபத்தைத் தணித்து மகிழ்வூட்ட அவதாரம் எடுத்ததுபோல சில அமைச்சர்களும் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள். 

தினமும் காலையில் டி.வி-யில் வலம்புரி ஜான் மாதிரி தோன்றி புலிக்கதை, எலிக்கதை, நண்டுக்கதை சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார், `அம்மா இட்லி சாப்டாங்க, இல்லை, இடியாப்பம் தின்னாங்க, அவங்க கொள்ளையடிச்ச பணத்தை தினகரன் வெச்சிருக்காரு’ என்று அப்ரூவர் போல மாற்றி மாற்றிப் பேசும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், `மக்கள் சோப்பு போட்டு குளிப்பதால்தான் நொய்யல் ஆற்றில் நுரைபொங்கி ஓடுகிறது’ என்று சொன்ன அமைச்சர் கருப்பணன், `எங்க ஆட்சியை யாராலும் ஒண்ணும் பண்ண முடியாது; எல்லாத்தையும் மேல உள்ளவன் பார்த்துக்குவான்’ என்று மோடியை சூசகமாகக் கைகாட்டிப் பேசிய அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, `தென்பாண்டிச் சிங்கம் ஓ.பி.எஸ், கொங்குநாட்டுத் தங்கம் ஈ.பி.எஸ்’ என்று குழந்தைபோல போகிற இடங்களில் 'ரைம்ஸ்' பாடும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் என்று இந்தப் பட்டியல் நீண்டாலும், இதுபோன்ற அமைச்சர்களில் தொடர்ந்து `டாப்பில்' இருப்பவர் `தெர்மாகோல்' புகழ் செல்லூர் ராஜூதான்.  

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா முதல் எடப்பாடிவரை பார்த்து அசந்த ஓர் அமைச்சர் அவர்தான். சில காலம் அமைதியாக இருந்தவர் தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டார். சமீபத்தில் இவர் கூறிய ஒரு கருத்து, சமூக ஊடகங்களில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் மதுரைக்காரர்களின் ஆதிக்கம் அதிகம். பேச்சுக்கிடையே `மதுரைக்காரன்' என்று சொல்வதைப் பெருமையாக நினைப்பார்கள். இப்போது `நாங்களும் சிட்னிக்காரன்தான்டா’ என்கிறார்கள். இதற்குக் காரணம் செல்லூர் ராஜூதான்.

அவர், ``மதுரையில் எய்ம்ஸ் வரப்போகுது. நிறைய மேம்பாலங்களுடன் ஸ்மார்ட் சிட்டியாகப்போகுது. அதனால், விரைவில் மதுரை ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி போல மாறிவிடும்" என்றார். அவ்வளவுதான், செல்லூர் ராஜூவின் இந்த வார்த்தை வைரல் ஆனது! மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை, `இதுதான் சிட்னி பஸ் ஸ்டாண்டு' என்றும், கோரிப்பாளையம் சிக்னலை `இதுதான் சிட்னி ஜங்ஷன்' என்றும் அவற்றின் படங்களுடன் செல்லூர் ராஜூவின் படத்தையும் இணைந்து மீம்ஸ் போட்டுக் கதறடிக்கிறார்கள். 

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, `மதுரை சிட்னி நகரம் போல மாறும்னு சொன்னது ஒரு குற்றமா, இதுக்கெல்லாமா மீம்ஸ் போடுறது’ என்று அப்பாவியாகக் கேட்டார். அமைச்சர் செல்லூர் ராஜூவை எப்போதுமே யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அவர் எப்போது எப்படிப் பேசுவார் என்று யாரும் சொல்லிவிட முடியாது. மனதில் பட்டதை வெளியே கொட்டிவிடுவார். சீரியஸான நேரத்தில் காமெடியாகவும், காமெடியான நேரத்தில் சீரியஸாகவும் பேசுவார். இப்படித்தான் சில மாதங்களுக்குமுன் ஒரு நிகழ்ச்சியில் அவர், ``தி.மு.கவுக்குத் தலைவராக இருக்கும் தகுதி, மு.க. அழகிரிக்குத்தான் உண்டு. ஸ்டாலின் அதற்கு தகுதி இல்லாதவர். அழகிரி தி.மு.க. தலைவராக இருந்திருந்தால், எங்களுக்கெல்லாம் நெருக்கடி ஏற்பட்டிருக்கும்" என்று வெளிப்படையாகப் பேச அ.தி.மு.க.வினரே அதிர்ச்சிக்குள்ளாகினர். ``அப்படீன்னா நாம அழகிரிக்குப் பயந்துட்டுத்தான் இருக்கோமா" என்று மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த மற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் கேட்க, பின்னர்தான் பேசியதைச் சமாளிக்க முடியாமல் திணறினார் செல்லூர் ராஜூ. 

செல்லூர் ராஜூ

பொதுக்கூட்டம் என்று இல்லை, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்கூட யதார்த்தமாகச் சில விஷயங்களைப் பேசிவிடுவார். அ.தி.மு.க. மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், ``உங்களுக்கெல்லாம் விசிலடிக்கத் தெரியுமா?" என்று கேட்டுக் கூடியிருந்த மகளிரைக் கலங்கடித்தார். சிலர் கடுப்பாகிக் கூட்டத்தை விட்டே வெளியேறிச் சென்று விட்டனர். சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மாநகராட்சி துணை மேயராக இருந்த கோபாலகிருஷ்ணனுக்குக் கட்சி மேலிடத்தில் பரிந்துரை செய்து எம்.பி. சீட் வாங்கிக் கொடுத்தார். அதோடு விட்டிருந்தால் அவர் காலம் முழுவதும் செல்லூராரைக் கடவுளாகப் பாவித்திருப்பார். ஆனால், என்ன சொன்னார் தெரியுமா, ``இந்தக் கோபாலகிருஷ்ணன் அமைதிப்படை படத்துல வர்ற அமாவாசை மாதிரி, சாதாரணமா இருந்தவரு, துணை மேயரானார். இப்ப எம்.பி. ஆகி மேலே வந்துட்டாரு" என்று பொதுமேடையில் பேச, மக்கள் சிரிக்க, பாவம் கோபாலகிருஷ்ணனால் ஒன்றும் சொல்ல முடியாமல் நெளிந்தார். தன்னைப் பற்றி அமாவாசை என்று செல்லூர் ராஜூ தெரிவித்தது, மதுரைக்கு வந்தால் ஞாபகத்துக்கு வந்துவிடும் என்பதாலேயே தொகுதிப் பக்கம் எட்டிப் பார்க்காமல் டெல்லியிலேயே இருக்கிறார் கோபாலகிருஷ்ணன். 

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோதும், பின்னர் அவர் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டபோதும் செல்லூர் ராஜூ, மதுரையில் நடத்திய ஆன்மிகத் திருவிழாவை யாராலும் இதுவரை `பீட்' பண்ண முடியவில்லை. காவடி எடுப்பதையும், அலகு குத்துவதையும் ஒரு தொழிலாக மாற்றினார். கொஞ்சம் விட்டிருந்தால் அவர்கள் தொழிற்சங்கமே தொடங்கியிருப்பார்கள். அந்தளவுக்குச் சில வருடங்களுக்கு முன் காவடி எடுப்பதையும் பால்குடம் சுமப்பதையும் `அவுட் சோர்ஸிங்கில்' கொண்டு வந்தார். இவருக்குப் போட்டியாக மதுரையின் மற்றோர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்னென்னவோ செய்து பார்த்தார். செல்லூராரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை. அதன் பின்புதான் ஆன்மிகத்தில் மட்டுமல்ல; அறிவியலிலும் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த லெவலில் உள்ளவன் என்று தன்னை நிரூபிக்கக் கையில் எடுத்ததுதான், தெர்மாகோல் திட்டம். வைகை அணையின் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க, அவர் போட்ட தெர்மாகோல் திட்டத்தை அதிகாரிகளால் எந்தக் கேள்வியும் கேட்க முடியாமல் போனது. அன்று காற்று மட்டும் வேகமாக வீசவில்லை என்றால் உலக அளவில் இத்திட்டம் பேசப்பட்டிருக்கும். என்ன செய்வது? காற்று செய்த சதியால் செல்லூர் ராஜூவின் தொலைநோக்கு ஆராய்ச்சி தடைபட்டது. அதனாலென்ன, கூகுளில் தெர்மாகோல் என்று டைப் அடித்தால் செல்லூர் ராஜு என்று வரிசையாக வருகிறது. சுந்தர் பிச்சை பல வருடங்களாகக் கடுமையாக உழைத்து கூகுள் நிறுவனத்தில் உயர் பதவிக்கு வந்தார். செல்லூர் ராஜூவோ, தெர்மாகோல் புகழால் கூகுளையே ஆண்டு கொண்டிருக்கிறார். 

செல்லூர் ராஜூ

சில நேரங்களில் செல்லூர் ராஜூ சீரியஸாகவும் பேசுவார், மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது. சிலர் நீதி மன்றத்துக்கெல்லாம் சென்றார்கள். ``அ.தி.மு.க. உறுப்பினர் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். அதனால் சீக்கிரம் உறுப்பினர் கார்டுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்’’என்றார். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும், கடும் எதிர்ப்பும் ஆட்சேபமும் தெரிவித்தன. ``நான் அப்படிச் சொல்லவில்லை" என்று பின்னர் சமாளித்தார். ஒரு நிகழ்ச்சிக்குப் போய்விட்டால், அதைப்பற்றி தெரிகிறதோ இல்லையோ, எதையாவது பேசி சமாளித்து விடுவார், மற்றவர் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட மாட்டார். 

சமீபத்தில் மதுரை விளாச்சேரியில் பரிதிமாற்கலைஞரின் நினைவு இல்லத்தில் நடந்த பிறந்த நாள் விழாவுக்குச் சென்றவர், அங்கு பேசும்போது, `பரிதிமாற்கலைஞர் சிறந்த நாடகக் கலைஞர்’ என்று குறிப்பிட, விழாவுக்கு வந்திருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். `நாடக நூல்கள் உட்பட பல நூல்களை எழுதிய பன்முக இலக்கியவாதியான அவரை இப்படி ஒரே வரியில் நாடகக் கலைஞர் என்று கூறிவிட்டாரே' என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் புலம்பித் தீர்த்தார்கள். 

கடந்த சில தினங்களுக்கு முன், `தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெறுகிறது' என்று பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா சொல்லியிருக்கிறாரே?' என்று செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ``யார் ஊழல் செய்கிறார்கள் என்று மக்களுக்குத் தெரியும். மக்கள்தான் நீதிபதிகள்" என்று சட்டென்று பதில் கூறினார்.

`வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே, தமிழகத்துக்கு எய்ம்ஸ் கொண்டுவர திட்டமிடப்பட்டது’ என்று பி.ஜே.பி. தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியது பற்றி கேட்டபோது, ``அப்ப, 2003-ம் ஆண்டிலேயே ஏன் எய்ம்ஸ் கொண்டு வரவில்லை.?’’ எனத் தமிழிசைக்கு எதிர்கேள்வி கேட்டு, அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இப்படி தான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒவ்வொரு நொடியையும் அவரே செதுக்கிச் செயல்படுத்தி வருகிறார் செல்லூரார்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்