கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க-வினர் நள்ளிரவில் விடுதலை! | The DMK who showed black flag against the governor. There are released at midnight

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (21/07/2018)

கவர்னருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டிய தி.மு.க-வினர் நள்ளிரவில் விடுதலை!

ஆளுநருக்கு கறுப்புக்கொடி  காட்டியதற்காகக் கைதுசெய்யப்பட்ட புதுக்கோட்டை  தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், நள்ளிரவில் விடுதலைசெய்யப்பட்டனர்.
 
திமுகவினர்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் பயணமாக  நேற்று அதிகாலை ரயில் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து  புதுக்கோட்டை சென்ற ஆளுநர்,   அங்கு  அலுவலர்கள் மற்றும் அரசுப் பணிகள்குறித்து ஆய்வுசெய்தார். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

இந்நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிராக இருப்பதாக, தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள் புதுக்கோட்டை மகளிர் கல்லூரி மைதானம் அருகே  ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்றனர்.

எதிர்க்கட்சிகளின் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததுடன், தடையை மீறி போராட்டம் நடத்தினால், கைதுசெய்து சிறையில் அடைப்போம் என எச்சரித்திருந்தார்கள். அதையும் மீறி புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி, அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தி.முக எம்.எல்.      ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன் முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன், சண்முகம் என 1500-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. 

இறுதியாக, போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கைதுசெய்யப்பட்டு, புதுக்கோட்டை  நகரிலுள்ள மூன்று திருமண மண்டபங்களில் நேற்று அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் நள்ளிரவுவரை  விடுதலை செய்யப்படாததால்,  கைதுசெய்யப்பட்ட தி.மு.க-வினரை விடுதலைசெய்யக் கோரி, திருச்சி மாவட்டத்தில்  ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்டவர்களை பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்து, சிறையில் அடைக்கப்போவதாகத் தகவல் வெளியானதால், புதுக்கோட்டை அரசியல் வட்டாரம் பரபரப்பானது. ஆனால், கைதுசெய்யப்பட்டவர்கள் நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் விடுதலைசெய்யப்பட்டனர்.