தூத்துக்குடி கலவரம் வீடியோ காட்சிகள்; சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு

தூத்துக்குடியில், முற்றுகைப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணைக்காக சென்னையிலிருந்து வந்த சைபர் க்ரைம் போலீஸ் குழுவினர், ஆய்வைத் தொடங்கியுள்ளனர். 

தூத்துக்குடி கலவரம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த மே 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டது. இதில், நடத்தப்பட்ட தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக முதலில் 3 வழக்குகளும், பின்னர் 2 வழக்குகள் என மொத்தம் 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றம்செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி,  ஏ.டி.எஸ்.பி., மாரி ராஜா தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள், சி.பி.சி.ஐ.டி போலீஸார் என 100 பேர், 10 தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து, கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பணி 5 நாள்களாக நடைபெற்றது.

இந்த ஆய்வில் கைப்பற்றப்பட்ட பொருள்கள், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் ஆடைகள், துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட  துப்பாக்கிகள், தோட்டாக்கள், காலித் தோட்டா உறைகள் ஆகியவற்றை கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்துவிட்டு, பின் இவற்றை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பிவைத்தனர். சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்ட 5 வழக்குகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த போலீஸார், காயம் அடைந்தவர்கள், வெளி மாவட்டத்திலிருந்து பாதுகாப்புப் பணிக்கு வந்த போலீஸார் எனப் பல தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களை அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகளை ஆய்வுசெய்ய, சென்னையில் இருந்து சைபர் க்ரைம் போலீஸார் குழுவினர் தூத்துக்குடிக்கு வருகைதந்துள்ளனர். இக்குழுவினர், கலவரம் தொடர்பாக போலீஸார் சேகரித்து வைத்துள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகள், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள், இவ்வழக்குகள் தொடர்பாக போலீஸார் கைதுசெய்துள்ளவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் ஆகியவற்றை ஆய்வுசெய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

சமூக வளைதளங்களில் கலவரம் தொடர்பாக பகிரப்பட்ட வீடியோக்கள், படங்களை அதிகம் பரப்பியவர்கள் கலவரத்தில் தொடர்புடையவர்களா? போலீஸார் சந்தேகிக்கும் நபர்களின் பட்டியலில் உள்ளவர்களா? எனவும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. ஆய்வுக்குப் பின், சைபர் க்ரைம் போலீஸார் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு  ஆய்வுகுறித்த முழு விளக்கம் அளிக்க உள்ளதாகவும்,  சைபர் க்ரைம் குழுவினரின் இந்த ஆய்வுப்பணி 3 நாள்கள் வரை நடைபெற உள்ளதாகவும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!