வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (21/07/2018)

கடைசி தொடர்பு:13:31 (21/07/2018)

பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டை மூட்டைகளைக் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் நடுக்கடலில் மடக்கிப்பிடித்தனர்.

இலங்கைக்கு கடல் அட்டை கடத்த முயன்றவர்கள் மற்றும் கடல் அட்டைகள்
 

இந்திய கடல் பகுதியில்,  பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களில் கடல் அட்டையும் ஒன்றாகும். இதனால் கள்ளத்தனமாக கடல் அட்டைகளைப் பிடித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழிலில் சில மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு அனுப்பப்படும் கடல் அட்டைகளுக்கு அதிக விலை கிடைப்பதால், தொடர்ச்சியாக இந்த சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தடுக்கும் பணியில் வன உயிரினப் பாதுகாப்புத் துறையினர், கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், க்யூ பிரிவு போலீஸார் எனப் பலரும் ஈடுபட்டுவந்தாலும், அவ்வப்போது கடல் அட்டைகளைக் கடத்திச்செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

இந்நிலையில், நேற்றிரவு மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் ஆய்வாளர் சுபாஷ்சந்திரபோஸ், சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர், பாம்பன் தென் கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, குருசடைத் தீவு அருகே சென்றுகொண்டிருந்த நாட்டுப்படகைப் பிடித்து சோதனைசெய்தனர். அதில், அரசால் தடைசெய்யப்பட்ட  காயவைத்த கடல் அட்டைகள் மூட்டை மூட்டையாகச் சிக்கின. இவற்றைப் பறிமுதல்செய்த போலீஸார், படகில் இருந்த தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த மலையாண்டி, வேதாளையை சேர்ந்த காசிம் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட கடல் அட்டையின் இலங்கை மதிப்பு ரூ.1.50 கோடி எனத் தெரியவந்துள்ளது. கடல் அட்டைகளைக் கடத்த பயன்படுத்திய நாட்டுப்படகையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.  இது தொடர்பாக, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் தொடர் விசாரணை நடத்திவருகின்றனர்.