சென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு! | Engineer found lying on chennai road

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (21/07/2018)

கடைசி தொடர்பு:14:41 (21/07/2018)

சென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு!

இன்ஜினீயர்

சென்னை அமைந்தகரையில் சுற்றித்திரிந்த மின்வாரிய முதன்மை இன்ஜினீயர், கர்நாடகா மங்களூரில் உள்ள மருந்தகத்தின் மருந்துச் சீட்டு மூலம் கண்டறியப்பட்டுள்ளார். 

சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல ஷாப்பிங் மஹால் எதிரில் சில நாள்களாக முதியவர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவரிடம் விசாரித்தபோது எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.  அமைந்தகரை போலீஸார், சமூக சேவகர் வெங்கடேசனைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தனர். இதனால், அந்த 75 வயது முதியவரை மீட்டு போரூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். அப்போது, அவர் பேன்ட், பனியன் மட்டும் அணிந்திருந்தார். அவரின் பேன்ட் பாக்கெட்டில் கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள பி.ஹெச் மெடிக்கல் என அச்சிடப்பட்ட மருந்துச் சீட்டு இருந்தது. அதில் உள்ள நம்பரில் வெங்கடேசன் தொடர்புகொண்டு பேசினார். விவரத்தைத் தெரிவித்ததும் மருந்துக்கடை உரிமையாளர் முதியவரின் உறவினர்களைத் தேடினார். அப்போது, முதியவரின் விவரம் கிடைத்ததும் வெங்கடேசனை மருந்துக்கடை உரிமையாளர் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்தார். அப்போதுதான், முதியவர் குறித்த விவரங்கள் தெரிந்தன. 

இன்ஜினீயர்

இதுகுறித்து வெங்கடேசன் கூறுகையில், ``அமைந்தகரை போலீஸார் தகவல் தெரிவித்ததும் வசந்தி, பரக்கத், மேரிதாமஸ், ராஜா ஆகியோர் சென்று முதியவரை மீட்டோம். அவரிடம் விசாரித்தபோது அவர் எந்தத் தகவலும் சொல்லவில்லை. மருந்துச் சீட்டு மூலம்தான் அவரின் முழு விவரம் கிடைத்தது. முதியவரின் பெயர் சுப்பராயகாராந்த். இவர், குஜராத் மாநில மின்வாரியத்தில் முதன்மை இன்ஜினீயராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரின் சொந்த மாநிலம் கர்நாடகா, மங்களூர், மாத்குருடா என்ற பகுதியாகும். முதுமை காரணமாக ஞாப நோயால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 14-ம் தேதி திருப்பதிக்குக் குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது, அங்கிருந்து மாயமாகி சென்னை வந்துள்ளார். சுப்பராயகாராந்த்தை அவரின் குடும்பத்தினர் திருப்பதியில் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தற்போது, அவர் சென்னையில் இருக்கும் தகவல் கிடைத்ததும் சுப்பராயகாராந்த்தின் மகன் ஷியாம்காராந்த் நேற்று சென்னை வந்து அப்பாவை அழைத்துச்சென்றார். அவரை மீட்ட எங்களுக்கும் தமிழகக் காவல்துறைக்கும் நன்றி தெரிவித்தார். 6 நாள்களுக்குப் பிறகு அவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் அணிந்திருந்த அரைச் சவரன் மோதிரத்தையும் பத்திரமாக ஷியாம்காராந்திடம் ஒப்படைத்துள்ளோம்" என்றார்.