மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்! 29 மாணவர்கள் ஆப்சென்ட்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு பள்ளியில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பவர் சமையல் வேலை செய்வதற்கு மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 87 பேர் மீது வன்கொடுமை சட்டம் பாய்ந்துள்ளது. 12 முக்கியக் குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாக செய்யூர் போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, பாப்பம்மாள்  மீண்டும் அதே பள்ளியில் பணிக்கு அமர்த்தப்பட்டார். தற்போது, சமையல் பணிகளை அவரே மேற்கொள்கிறார். நேற்று பள்ளி திறக்கப்பட்டதும் அங்கே படித்துக்கொண்டிருந்த 75 மாணவர்களில் 46 பேரே வந்திருந்தனர்.  29 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாப்பாம்மாள் தன் கையால் உணவு பரிமாறினார். 

மீண்டும் பணியில் பாப்பாம்மாள்

இந்தப் பள்ளியில் பாப்பம்மாள்  பணிபுரிய 30 பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். `இங்கே உள்ள  மற்ற பள்ளிகளில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் சமையல் பணியில் இல்லை. நாங்கள் மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பாப்பம்மாள் ஏன் இந்த வேலைக்கு வர வேண்டும். வயல் வேலைக்குச் செல்லவேண்டியதுதானே. நீ சமைத்தால் எங்கள் குழந்தைகள் எப்படி சாப்பிடும்?' என்று அவரை மோசமான வார்த்தைகளால் பேசியதோடு, பாப்பம்மாளை தற்கொலை செய்து கொள்ளவும் தூண்டியிருக்கின்றனர்.  சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களை வெளியே தூக்கி எறிந்து அவமானப்படுத்தியுள்ளனர். 

முதலில் மாற்று சமூகத்தினரின் மிரட்டலுக்குப் பணிந்த அரசு, பாப்பம்மாளுக்கு ஆதரவாக போராட்டம் வெடித்ததையடுத்து, அவரை மீண்டும் அதே பள்ளியில் பணிக்கு அமர்த்தியது.  பள்ளித் தலைமை ஆசிரியை சசிகலா, ''இந்தப் பள்ளியில் இதற்கு முன் எந்தச் சாதியப் பாகுபாடும் இருந்ததில்லை. பட்டியலின மாணவர்களுடன் பிற மாணவர்கள் உணவைப்  பகிர்ந்து உண்பதைப் பார்த்துள்ளேன்'' என்று வேதனையுடன் கூறுகிறார். 

பிஞ்சுகள் மத்தியில் விஷத்தை விதைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!