ஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம்!

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு காவிரியின் கரைகளில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 

ஆளில்லா விமானங்கள்

இதனை அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவின் உதவியுடன் பேரிடர் மேலாண்மைக் குழு செய்து வருகிறது. காவிரி வந்து இறுதியாக கடலுடன் சங்கமிக்கும் இடம் அமைந்துள்ள நாகை மாவட்டத்தில் நான்கு இடங்களில் இந்த ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஓர் இடமாக மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஆளில்லா விமானக் கண்காணிப்பு பணியைத் தொடங்கி வைத்த மயிலாடுதுறை தாசில்தார் விஜயராகவனிடம் இது குறித்து கேட்ட போது, ``பேரிடர் காலத்தின் போது காவிரி வடிநில கோட்டப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்காக காவிரி ஆற்றங்கரைகள் உறுதியாக இருக்கிறதா, எந்தெந்த இடங்கள் பலவீனமாக உள்ளன என்பதைக் கண்காணித்து புகைப்படம் எடுப்பதற்காக அண்ணா பல்கலைக்கழக வல்லுநர் குழுவினர் ஆளில்லா விமானங்களை மயிலாடுதுறை பகுதியில் இரண்டு இடங்களில் இயக்குகின்றனர். இந்த விமானத்தின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை கொண்டு வரைபடம் தயாரிக்கப்பட்டு காவிரிக்கரையின் பலவீனமான பகுதிகள் கண்டறியப்பட்டு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சரிசெய்யப்படும்" என்றார்.

மேலும், இதைப் பற்றி இதன் ஒருங்கிணைப்பாளர் வேலன் கூறுகையில், ``தமிழகத்தில் கடலூர், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை போன்ற பல மாவட்டங்களில் கடந்த பல மாதங்களாக ஆளில்லா விமானங்கள் மூலம் பார்வையிட்டுப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிகளில் இப்பணியைத் தொடங்கியுள்ளோம்.

ஆளில்லா விமானங்கள்

முதலில் நாகை மாவட்டத்தில் 4 இடங்களில் இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது. 90 கி.மீ. வேகத்தில் பறக்கும் இந்த ஆளில்லா விமானம் சுற்றுப் பகுதியில் 10 கி.மீ தூரம் வரை சென்று கண்காணிக்கும் போது 42 மீட்டருக்கு ஒரு புகைப்படம் இதனால் எடுக்கப்படும்.  அந்தப் புகைப்படங்களை சென்னைக்குக் கொண்டு சென்று எங்கள் குழுவினர் வரைபடம் தயாரித்து அளிப்பார்கள். அதன் மூலம் காவிரிக் கரையின் பலவீனமான பகுதிகள் கண்டறியப்பட்டு வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!