வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (21/07/2018)

கடைசி தொடர்பு:16:08 (21/07/2018)

`இப்படியும் ஜாலியாக கல்வி கற்கலாம்'- செங்கல்பட்டு அரசு ஆசிரியையின் கலக்கல் டீச்சிங்! 

கல்வி கற்பிக்கும் ஆசிரியர் கவிதா

படிக்கும் பாடங்களை எளிதில் மனதில் பதியவைக்கும் யுக்தியோடு செங்கல்பட்டு அருகே உள்ள தென்பாதி அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா, கற்றுக்கொடுத்துவருகிறார். மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் வீடியோவை முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார். 

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், இதற்கு முன்பு தமிழ் எழுத்துக்களைக் கற்றுக்கொடுக்கும் வீடியோ வைரலானது. உடலை நன்கு வளைத்து, சைகையோடு அவர் கற்பிக்கும் அந்த வீடியோவுக்கு, கல்வியாளர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது.  அதுபோலத்தான், அரசுப் பள்ளி ஆசிரியை கவிதா, மாணவ, மாணவியருக்கு ஞாபகசக்தியை வளர்க்கும் பாடல்களை சைகையுடன் கற்பிக்கும் வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

இதுகுறித்து ஆசிரியை கவிதாவிடம் கேட்டதற்கு, ``இது எல்லாம் பழைய கற்பித்தல் முறைதான். இந்த வகையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்தால்,  மாணவ மாணவியர் அதை எளிதில் மறக்க மாட்டார்கள். மாணவர்களை சுற்றி நிற்கவைத்து, செய்கையோடு (ஆக் ஷன்) கற்றுக்கொடுக்கும்போது, அது எளிதில் மாணவர்களுக்குப் புரியும். இந்த முறையைப் பின்பற்றித்தான் கற்றுக்கொடுத்தேன். அதற்கு நல்ல பயன்கிடைத்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறை, கற்பித்தல் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவருகிறது. அதோடு, பாடத்திட்டங்களிலும் புதுமைகள் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கல்வி ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில், க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்கள் படிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவும், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பள்ளிக் கல்வித்துறை மாறிக்கொண்டியிருக்கிறது. அதுதொடர்பான பயிற்சிகளையும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அளித்துவருகிறது.  நான், நேற்று மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்த பாடல், அவர்களுக்கு ஞாபசக்தியை அதிகரிக்கும்" என்றவர், 'ஒரு விரல் ஆடியது' என்ற பாடலை பாடத்தொடங்கினர். அந்தப் பாடல் வரிகள் சில நொடிகளிலேயே நம்முடைய மனதில் பதிவானது. 

 வீடியோவில் அவர் பாடல்களைப் பாட, அதை மாணவ மாணவியர் உற்சாகத்தோடு பாடினர். பாடல்களைப் போல தமிழ் எழுத்துகள், ஆங்கில எழுத்துகளை மனதில் பதியவைக்கவும் விளையாட்டோடு சேர்ந்த கல்வியும் உள்ளது. அதாவது, மாணவ, மாணவியரை வட்டமாக அமரவைத்து, அதில் ஒவ்வொரு எழுத்தையும் எழுத வேண்டும். அந்த எழுத்துகள் அருகே, மாணவர்கள் துள்ளிக் குதித்தபடியே அதை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு செய்யும்போது, அது எளிதில் மனதில் பதிந்துவிடும் என்கின்றனர் கல்வியாளர்கள். இவ்வாறு மாணவர்களுக்கு ஞாபசக்தியை அதிகரிக்க பல வழிமுறைகள் கல்வித்துறையில் உள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.