வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (21/07/2018)

கடைசி தொடர்பு:15:46 (21/07/2018)

வேலை செய்த நகைக்கடையில் அண்ணன், தம்பிகளின் விசித்திரமான கைவரிசை!

தங்கம் கொள்ளைபோன நகைக்கடை

சென்னையில் உள்ள நகைக்கடையில் வேலைபார்த்துக்கொண்டே, கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கிலோ தங்கத்தை அண்ணன், தம்பிகள்  திருடியுள்ளனர். 

சென்னை தி.நகர் ஜி.என் செட்டி ரோட்டில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்தக் கடையை ஷர்னிக் நாகர் என்பவர் நடத்திவருகிறார். இவர், பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், `நான், கடந்த மூன்று ஆண்டுகளாக நகைக்கடை நடத்திவருகிறேன். கடந்த நவம்பர் மாதம் என்னுடைய தூரத்து உறவினர்களான நிர்மல் கதோடு, நித்திஷ்கதோடு ஆகியோரை வேலைக்குச் சேர்த்தேன். அவர்கள், விற்பனைப் பிரிவில் பணியாற்றினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, நகைக்கடையில் ஜூன், ஜூலை மாத ஸ்டாக்கை ஆய்வுசெய்தேன். அப்போது, ஒரு கிலோ 299 கிராம் தங்க நகைகள் மாயமாகியிருந்தன. அதுகுறித்து நிர்மல் கதோடு, நித்திஷ் கதோடு ஆகியோரிடம் விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணானத் தகவல்களைத் தெரிவித்தனர். எனவே, அவர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதோடு, நகைகளை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் நிர்மல், நித்திஷ் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், நகைகளைத் திருடியதை அவர்கள் ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,  ``வேலைக்குச் சேர்ந்த நாள் முதல், நிர்மல், நித்திஷ் ஆகிய இருவரும் கொஞ்சம், கொஞ்சமாக நகைகளைத் திருடத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மீதுள்ள நம்பிக்கையால், அவர்களைக் கடையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்யவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களில், ஒரு கிலோ 229 கிராம் தங்க நகைகளைத் திருடியுள்ளனர். அதில் 11 நெக்லஸ், காதில் அணியும் நகைகள் 9 , ஒரு செயின் ஆகியவற்றை அண்ணன் தம்பிகளான நிர்மல், நித்தீஷ் ஆகியோர் திருடியுள்ளனர்" என்றனர்.