லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் சிக்குவது முதல்முறையல்ல! - பின்னணி தகவல்

மாணவி விவகாரத்தில் சிக்கியவர்கள்

சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்த 7-ம் வகுப்பு மாணவிக்கு கூட்டாகப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் கைதான லிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவிக்கு மயக்க ஊசி, மயக்க மருந்து எனக் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த ரவிக்குமாருக்கு வயது 66. பேத்தி வயதில் உள்ள மாணவிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரவிக்குமார் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த போலீஸார், அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்தளவுக்கு மாணவிக்கு அதிகளவில் தொல்லை கொடுத்திருக்கிறார். 

 மாணவியின் அம்மா கொடுத்த புகாரில் முழு விவரங்கள் உள்ளன. இதனால், ரவிக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள நிலையில் அவரின் மறுப்பக்கங்கள் குறித்து விரிவாக நம்மிடம் பேசினார் காவல்துறை உயரதிகாரி ஒருவர், 
``ரவிக்குமார் வீட்டில் ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள சிறுமியிடமும் ரவிக்குமார் சில ஆண்டுகளுக்கு முன்பு தவறாக நடந்துள்ளார். இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. அப்போது அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரின் தலையீட்டால் ரவிக்குமார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரவிக்குமாரின் ஒரு மகன், மத்திய அரசு வேலையில் இருக்கிறார். 

சில ஆண்டுகளுக்கு முன்பு ரவிக்குமார், திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் கட்சியில் பகுதி செயலாளராக இருந்துள்ளதாகத் தகவல் உள்ளது. அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம். இந்த வழக்கில் எங்களின் சந்தேக வளையத்தில் 8 பேர் உள்ளனர். அவர்களும் மாணவியிடம் தவறாக நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை. கிடைத்தவுடன் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

ரவிக்குமார் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. ஆனால், அதையெல்லாம் வெளியிடாமல் போலீஸார் அமைதியாக இருக்கின்றனர். இதற்கிடையில் மாணவி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு தரப்பிலிருந்தும் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில விஷயங்கள் சூசகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவிக்கு சிகிச்சை, கவுன்சலிங் அளிக்கப்படும்போது முக்கிய தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவியின் எதிர்காலத்தைக் கருதில்கொண்டு பல தகவல்களைப் போலீஸாரும் சம்பந்தப்பட்டவர்களும் ரகசியமாக வைத்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது சில தகவல்கள் மட்டும் வெளி வருகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!