வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:18:00 (21/07/2018)

`எங்கள் அருங்காட்சியகத்தைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டருக்கு உருக்கமான வேண்டுகோள்

``தொல்லியல் அருங்காட்சியகத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் மணல் கொள்ளை நடைபெறுகிறது என்று அமைச்சரிடம் புகார் கொடுத்தோம். இதுவரையிலும் நடவடிக்கை இல்லை. எங்களது அருட்காட்சியகத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உருக்கமாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.

`அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்துக்கு அருகில் 2 கோடி மதிப்பீட்டில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் தமிழக அரசால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக அப்பகுதியில் 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அருங்காட்சியகத்துக்கான முதல் கட்ட பணிகள் முடிவடைந்து திறக்கப்பட உள்ளன. இதைக் கடந்த சில நாள்களுக்கு முன் மாநிலத் தமிழ்ப் பண்பாட்டுத் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில் திறந்தவெளி அருங்காட்சியகத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட இடத்தின் நடுவே பெரிய ஓடை செல்கிறது. இதில் மணல் அதிகளவில் படிந்துள்ளது. இதை மணல் கொள்ளையர்கள் தினந்தோறும் இரவு நேரங்களில் மணல் லாரிகள் மூலம் கொள்ளையடித்து வருகின்றனர். இதனால் திறந்த வெளியில் உள்ள உலகப் புகழ்வாய்ந்த தொல்லுயிரிகள் அழிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும்'' எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் பாண்டியராஜன் வந்தபோது அப்பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் புகார் செய்தபோது உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினார். இருந்த போதிலும் மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.