`பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் பயிற்சியுடன் கடன்!’ - விஞ்ஞானி அழகுகண்ணன் தகவல்

முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு குழு அமைத்து, அதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில்கள் செய்ய கடனுதவி வழங்கப்பட்டு வருவதாக இந்திய வேளாண்மை அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி அழகுக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

                                               

அரியலூர் மாவட்டம் சோழமாதேவியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கிரீடு தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்திய வேளாண்மை அறிவியல் மையம் செயல்பட்டு வருகின்றது. இம்மையத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெறும் வகையில் காளான் வளர்ப்பு, நாட்டுக் கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், மரக்கன்றுகள் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த தொழில்கள் செய்ய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேளாண் அறிவியல் மையத்தில் காடை வளர்ப்பு குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில், வேளாண் அறிஞர்கள் கலந்துகொண்டு வேளாண்மையுடன் சார்ந்து எவ்வாறு காடை வளர்ப்பது, விற்பனை செய்யும் முறைகள் என்பது குறித்து விளக்கினர். மேலும், காடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளும் கலந்துகொண்டு, தங்களது அனுபவங்களை வழங்கினர். இப்பயிற்சியில் அரியலூர், கடலூர், தஞ்சாவூர், விழுப்புரம உள்ளிட்ட 9 மாவட்டங்களிலிருந்து 40 விவசாயிகள் கலந்துகொண்டனர்.

                                    

இதுகுறித்து வேளாண்மை அறிவியல் மையத்தின் மூத்த விஞ்ஞானி அழகுகண்ணன் கூறும்போது. "வேளாண்மை அறிவியல் மையத்தில் வேளாண் சார்ந்த பல்வேறு தொழில்கள் செய்ய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பட்டதாரி இளைஞர்கள், வெளிநாடு சென்று திரும்பிய இளைஞர்கள் ஆகியோருக்கு இவ்வகையான பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு, வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு குழு அமைத்து, அதன் மூலம் வேளாண் சார்ந்த தொழில்கள் செய்ய வங்கி வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்யவதற்கான விற்பனை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரப்படுகின்றது. மேலும், ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்துடன் இனைந்து சுய தொழில் பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்’’ என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!