வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (21/07/2018)

கடைசி தொடர்பு:17:30 (21/07/2018)

4-ம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ!

மதுரையில் திரவியம் என்ற ஓய்வு பெற்ற துணை காவல் ஆய்வாளர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.ஐ. வீட்டில் முன் குவிந்த மக்கள்

மதுரை ஆத்திகுளம் சுவாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் திரவம். சுமார் 70 வயதுடைய இவர், காவல் துறை துணை ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், அப்பகுதியில் உள்ள 9 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுமி இன்று மளிகைப் பொருள்கள் வாங்க தனது வீட்டுக்கு அருகே உள்ள கடைக்குச் சென்றபோது, திரவியம் சிறுமியிடம் அத்துமீற முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்தச் சிறுமி, கதறி அழுதுக்கொண்டே, தன் பெற்றோரிடம் சொல்லியுள்ளார். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினர், திரவியத்தின் வீட்டின் முன்குவிந்தனர். மேலும், அப்பகுதியினர் அவரைத் தாக்கவும் முயற்சி செய்துள்ளனர். அப்போது, திரவியத்தின் மனைவி அவரைக் காப்பாற்றி வீட்டுக்குள் அடைத்து பூட்டியுள்ளார். பொதுமக்கள் தல்லாகுளம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து, திரவியத்தை விசாரணை செய்ய காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .