தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகள் ஆய்வுப்பணி தொடக்கம்!

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் விசைப் படகுகளின் நிலை குறித்து வருடாந்தர ஆய்வைத் தொடங்கினர்.  

கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் விசைப்படகுகளின் நிலை குறித்து, ஒவ்வொரு வருடமும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். இந்த ஆய்வில் விசைப்படகுகளின் நீளம், அகலம், இயந்திரத்தின் குதிரைத் திறன் மற்றும் படகின் நிலை குறித்து ஆய்வு செய்து அதில், பழுது ஏற்பட்ட விசைப்படகுகள், விதிமுறைகள் மீறப்பட்ட விசைப்படகுகளின் உரிமம் ரத்து செய்யப்படும். அத்துடன், இந்த விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விசைப்படகுகளின் இந்த ஆய்வுப் பணிகள் ஒவ்வொரு வருடமும் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நாள்களில் நடைபெறும். இத்தடைக் காலத்தில் விசைப்படகுகள் சீரமைக்கும் பணிகளும் நடைபெறும். ஆய்வுக்குப் பிறகு விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும்.

இந்த வருட மீடித் தடைக்கால நாள்களில் தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வந்ததால், விசைப்படகுகள் ஆய்வு செய்யும் பணி நடைபெறவில்லை. இந்நிலையில், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகுகளை ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கியது. மீன்வளத்துறை மண்டல இணை இயக்குநர் அமல சேவியர் தலைமையில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மீன்வளத்துறை துணை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் என 20 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 258 விசைப்படகுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் விசைப்படகுகளின் நீளம், அகலம், இன்ஜினின் குதிரைத் திறன் ஆகியவை குறித்தும் விசைப்படகில் ஏதும் பழுது ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. இதேபோல, வேம்பார் கடல் மீன்பிடிப் பகுதியில் 37 படகுகள், வீரபாண்டியன் பட்டினம் கடல் மீன்பிடிப்பகுதியில் 6 படகுகள் ஆகியவையும் ஆய்வு செய்யப்பட்டன. தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் வெளியிட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட அரசாணையின்படி, விசைப்படகுகளின் நீளம் 24 மீட்டர், 240 குதிரைத் திறன் கொண்ட இன்ஜின்கள் என்ற அளவீடுகளின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு  நடைபெற்றதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!