வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (21/07/2018)

கடைசி தொடர்பு:16:43 (21/07/2018)

ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி! - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி

`இந்தத் தீர்மானத்தை நாம் எதிர்த்தால் மத்திய அரசின் ஏஜென்சிகளான வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்றவற்றின் வேகம் குறையும்; கூடவே ஆட்சியின் ஆயுள்காலமும் அதிகரிக்கும் என நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி.

ஸ்கோர் செய்த ஸ்டாலின்; திணறிய தினகரன், அன்புமணி! - நம்பிக்கையில்லா தீர்மானத்தை நம்பிய எடப்பாடி பழனிசாமி

த்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துவிட்டது. `அரசியல் கணக்குகளின் மூலம் ஆதாயம் தேடுவதற்கும் இந்தத் தீர்மானத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டன' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுமீது முதன்முதலாக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இந்தத் தீர்மானத்தில் 451 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் மத்திய அரசுக்கு ஆதரவாக 325 பேரும், எதிராக 126 பேரும் வாக்களித்தனர். நாட்டின் மூன்றாவது மிகப் பெரும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க-வோ மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது. இதற்கான காரணத்தை விளக்கிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, `கடந்த கூட்டத்தொடரில் நாங்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தோம். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, மத்திய அரசில் நான்காண்டு காலம் அங்கம் வகித்த தெலுங்குதேசம் கட்சி தீர்மானம் கொண்டுவந்தததால்தான் அதை ஆதரிக்கவில்லை' என்றார்.

அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டை விமர்சித்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், `நீட் தேர்வு, 15 வது நிதி ஆணையம், ஜி.எஸ்.டி, இந்தி திணிப்பு மற்றும் வகுப்புவாத அரசியல் அனைத்துக்கும் அ.தி.மு.க அரசு எதற்காக அடிபணிந்தது என்பது, தற்போது பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்ததன் மூலம் தெளிவாகிறது. இதன்மூலம், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்துவிட்டனர்' எனவும் குறிப்பிட்டிருந்தார். 

ராகுல்காந்தி

"நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கணக்கு இருக்கிறது. அந்தக் கணக்குகளை எல்லாம் சரிபார்த்துக் கொள்வதற்கு இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்" என விளக்கிய அரசியல் விமர்சகர் ஒருவர், "நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 'வெளிநடப்பு செய்வதுதான் சிறந்தது' என ஒரு சிலர் அவருக்கு விளக்கியுள்ளனர். நீண்டநேரமாக, எதிர்த்து வாக்களிப்பதா புறக்கணிப்பதா என்ற விவாதம் நடந்தது. இறுதியாக, ஆதரித்து வாக்களிப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதற்கு ஒரே காரணம், 'இந்தத் தீர்மானத்தை நாம் எதிர்த்தால் மத்திய அரசின் ஏஜென்சிகளான வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்றவற்றின் வேகம் குறையும்; கூடவே ஆட்சியின் ஆயுள்காலமும் அதிகரிக்கும்' என நம்பியதுதான்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க-வின் ஆதரவை பா.ஜ.க கேட்கவில்லை. இருப்பினும் வலிந்து போய் ஆதரவு கொடுத்ததற்கு ஒரே காரணம், எடப்பாடி பழனிசாமியின் நண்பர்கள், உறவினர்களை வருமான வரித்துறை வளைத்ததுதான். இந்தத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால், அரசியல்ரீதியாக எடப்பாடி பழனிசாமிக்கு வலு சேர்ந்திருக்கும். இனி அ.தி.மு.க தரப்பு அமைச்சர்களைக் குறிவைத்து வலுவாகக் களமிறங்குவார் அமித் ஷா. 'எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்' என மோடி தரப்பிலிருந்து கேட்காதபோது, அ.தி.மு.க தலைமை வலிந்து போய் தீர்மானத்தை எதிர்த்தது அரசியல்ரீதியான பின்னடைவுதான். 1998-ல் பா.ஜ.க அரசு கவிழ்க்கப்பட்டது குறித்தும் மோடி நேற்று குறிப்பிட்டார். இதன் பிறகும் அ.தி.மு.க எம்.பி-க்கள், மோடிக்கு ஆதரவாக வாக்களித்ததை ஏற்க முடியாது" என்றவர், 

"உண்மையில், இந்த விவகாரத்தில் பரிதாபத்துக்குரியவர் தினகரன்தான். என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது தெரியாமல் குழம்பிவிட்டார். நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி-கூட இல்லாவிட்டாலும், மோடி எதிர்ப்பை தன்வசப்படுத்தும் முயற்சியில் ஸ்டாலின் ஸ்கோர் செய்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையிலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து உறுதியான பதிலைக் கூறிவிட்டார். தி.மு.க நிலைப்பாட்டை விமர்சித்த தமிழிசையும், 'காங்கிரஸின் ஜீரோ செய்தித் தொடர்பாளர்' என ஸ்டாலினை விமர்சித்தார். மோடி அரசை எதிர்த்து ஸ்டாலின் கருத்து கூறியதன் பின்னணியிலும் சில விஷயங்கள் அடங்கியிருந்தன.

தினகரனையும் அன்புமணியையும் சந்திப்பதற்கு ராகுல் விரும்பவில்லை. ஒருவேளை அன்புமணியை ராகுல் சந்தித்திருந்தால், இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக அன்புமணி வாக்களித்திருப்பார். ராகுலை சந்திப்பது குறித்து குலாம்நபி ஆசாத் மூலமாக ராமதாஸ் தரப்பினர் பலமுறை பேசியபோதும், 'நீங்கள் தி.மு.க மூலமாக வந்து பாருங்கள்' எனக் காங்கிரஸ் நிர்வாகிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். கூடவே, 'திராவிடக் கட்சிகளுக்கு எதிராகக் பேசுவதைக் குறைத்துக்கொண்டு, தமிழகத்தின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் பாடுபட்டு வருகிறது எனத் தொடர்ந்து பேசுங்கள்' எனக் கூறியுள்ளனர். இந்தப் பதிலை ராமதாஸ் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான், வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்துவிட்டார் அன்புமணி. ராகுல் சந்திப்பு கிடைக்காததால்தான் தினகரனும் தீர்மானம் குறித்து எதுவும் பேசவில்லை" என்றார்.