வாகன சோதனையில் இளைஞர்களை விரட்டியடிக்கும் காவலர்கள்! பதற வைக்கும் வீடியோ!

இந்தச் சம்பவத்தின் போது காவலர்கள் வாகன ஓட்டி ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி நமக்குக் கிடைத்திருக்கிறது.

வாகன சோதனையில் இளைஞர்களை விரட்டியடிக்கும் காவலர்கள்! பதற வைக்கும் வீடியோ!

"மாலை நேரம் வந்தால் போதும்... சாலை வளைவுகளில் காரை பார்க் செய்துவிட்டு இரைக்காகக் காத்திருக்கும் கொக்கைப்போல காவலர்கள் காத்திருக்கிறார்கள். வாகன சோதனை என்ற பெயரில், பொதுமக்களை காவலர்கள் படுத்தும்பாடு சொல்லி மாளாதவை. பணத்துக்காக வாகன ஓட்டிகளைக் கேவலமாகப் பேசுவதும் அடித்து விரட்டுவதும், அதே பணத்தைப் பங்கு பிரிப்பதற்காகக் காவலர்களே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதுமாகப் பல்வேறு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை சமீப காலமாக அதிகளவில் காணமுடிகிறது. கடமைக்காக உயிரைப் பணயம் வைத்து வேலை செய்யும் நேர்மையான காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம் மக்களை மிரட்டிப் பணம் சுரண்டும் காவலர்களும் இருந்துதான் வருகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால்தாம் நேர்மையான காவலர்களுக்கும் கெட்டப்பெயர் கிடைக்கிறது" என்று குமுறுகின்றனர் பொதுமக்கள்.

காவல்துறையினர், வாகன ஓட்டிகளை மிரட்டிப் பணம் பிடுங்குவது போன்ற செயல்கள் சமீப காலமாக அதிகளவில் நடந்து வருகின்றன. சென்னை, சேத்துப்பட்டு காவல்துறையினர் கடந்த 19-07-2018 அன்று வாகன ஓட்டிகளை அடித்துப் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர். 19 ம் தேதி இரவு 11.30 மணியளவில் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில் எஸ்.ஐ. இளையராஜா மற்றும் அவருடன் சில காவலர்கள் வாகன சோதனை என்ற பெயரில் பண வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த வழியாக வாகனங்களில் பயணம் செய்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டிருக்கின்றனர். ஆவணங்களைக் காட்டிய பின்னரும் காவலர்கள் இளைஞர்களை செல்ல அனுமதிக்கவில்லை. எனவே, ``எங்களிடம் ஆவணங்கள் சரியாக இருக்கின்றன. பின்பு ஏன் விட மறுக்குறீர்கள்..?'' என இளைஞர்கள் கேட்டுள்ளனர். உடனே எஸ்.ஐ இளையராஜா மற்றும் அவருடன் இருந்த காவலர்கள் அந்த இளைஞர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

காவலர்களின் இந்தத் தாக்குதலில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த, கல்லூரி மாணவர் ஹாரூண் என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எஸ்.ஐ இளையராஜா மற்றும் அவருடன் இருந்த காவலர்களின் மீது ஹாரூண், காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

காவலர்கள் தாக்குதலுக்கு உள்ளான ஹாரூன்

அவர் கொடுத்துள்ள புகாரில், `திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது வழியில் என்னைக் காவலர்கள் வழிமறித்து ஆவணங்கள் கேட்டனர். போதிய ஆவணங்களைக் காட்டிவிட்டேன். பின்னர் ஆர்.சி புக்கின் ஒரிஜினலைக் கேட்டனர். `ஒரிஜினல் இங்கே இல்லை' என்றதும் வாட்ஸ்அப்பில் ஒரிஜினலை அனுப்பும்படி கேட்டனர். இரவு 11.45 மணி என்பதால், வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் எனக் கூறியும் தரச்சொல்லி நிர்பந்தித்தனர். இதனால் வண்டியை ஒப்படைத்துவிட்டு நாளை காலை ஒரிஜினலைக் காட்டிவிட்டு வண்டியை எடுத்துக்கொள்கிறேன் என்று கூறினேன். வண்டியை ஒப்படைத்ததற்கான ரசீது கொடுங்கள் எனக் கேட்டபோது என்னை ஓங்கி அறைந்தனர். அதன்பின்னர் சுமார் 15 காவலர்கள் என்னை விரட்டி விரட்டி லத்தியால் அடித்தார்கள். பின்னர் என் வீட்டுக்குத் தகவல் சொல்ல போனை எடுத்தபோது அதனையும் பிடுங்கிக் கொண்டார்கள். எனக்குக் கைகளிலும், கால்களிலும் பலத்த அடிபட்டுள்ளது. இதனால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எஸ்.ஐ. இளையராஜா மற்றும் அக்கொடுமைக்குத் துணைபுரிந்த மற்ற காவலர்கள் என அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டும்' எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் சம்பவத்தின் போது காவலர்கள் வாகன ஓட்டி ஒருவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி நமக்குக் கிடைத்திருக்கிறது. ``ஆவணங்களைக் கொடுங்கள். நான் செல்ல வேண்டும்'' எனக் கேட்ட ஓர் இளைஞரைக் காவலர்கள் அடித்திருக்கின்றனர். அதற்கு அந்த இளைஞர், ``எப்படி சார் இப்படி அடிக்கிறீங்க...'' எனக் கேட்டுக்கொண்டே வலியால் பின்னோக்கிச் செல்கிறார். அதற்கு காவலர்கள் அந்த இளைஞரை சூழ்ந்துகொண்டு ``டேய் நில்றா... என்னா வாயி... அப்படித்தாண்டா பண்ணுவோம்'' என ஓங்கி லத்தியால் அடிக்கிறார்கள். ``திரும்பக் கேளுடா...'' என மிரட்டுகிறார்கள். பின்னர் அந்த இளைஞர், ``சாரி சார்...'' என்கிறார். உடனே காவலர்கள், ''அந்த வார்த்தை வரணும்'' என மிரட்டுகிறார்கள். இப்படியான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி பார்ப்பவரை பதைபதைக்க வைக்கிறது. பறித்து வைத்துக்கொண்ட ஆவணங்களை மீண்டும் கேட்டதற்கு இப்படியொரு தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் காவலர்கள்

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்: 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!