`90,000 மாணவர்களும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது’ - நீட் குளறுபடிக்குத் தீர்வு சொல்லும் கல்வியாளர்கள்

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். `கருணை அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தால், ஆங்கில வழியில் தேர்வு எழுதிய மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதைத் தீர்ப்பதற்கு வழிகள் உள்ளன' என்கின்றனர் கல்வியாளர்கள். 

`மருத்துவப் படிப்பில் நுழைவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் 49 மதிப்பெண்கள் தவறாக இருந்ததால் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்' என மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, ‘தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்; இந்த மதிப்பெண்ணையும் கணக்கில் எடுத்துக்கொண்டு இரண்டு வார காலத்துக்குள் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுக் கலந்தாய்வு நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு நேற்று இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். 

செல்வகுமார் நீட்இந்நிலையில், கருணை மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்தால், ஆங்கில வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கின்றனர் கல்வியாளர்கள். இதுகுறித்து நம்மிடம் விவரித்தார் கல்வியாளர் 'ஆனந்தம்' செல்வகுமார். அவர் நம்மிடம் பேசும்போது, ``கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என்ற குழப்பத்துக்கு இடையில் தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தது. தேர்வு நடைபெறுவதற்கு முதல்நாள் இரவுகூட, `நீட் தேர்வு நடைபெற வாய்ப்பில்லை' என்று அறிக்கை விடக்கூடிய அளவில்தான் தமிழக அரசு இருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்விலும் வினாத்தாள் குளறுபடி நடந்தது. இதுகுறித்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பில், `2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு வினாத்தாளில், தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழைகள் காரணமாக, 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண் வீதம், 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்' என்ற உத்தரவை வழங்கியது. இது சரியான தீர்வா என ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடை நீக்கப்பட்டாலும், யாரும் பாதிக்கப்படாத வகையில் இதற்கு எளிமையான தீர்வை அளிக்க முடியும்" என்றவர், 

"நீட் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒரு கேள்விக்குத் தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 720 மதிப்பெண் வழங்கப்படும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண், தவறான பதிலுக்கு -1 மதிப்பெண் வீதம் மதிப்பீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 1,14,602 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். அதில், 24,720 மாணவர்கள் தமிழில் நீட் தேர்வை எழுதியுள்ளனர். மீதமுள்ள 90,000 பேர் ஆங்கிலத்தில் தேர்வு எழுதியுள்ளனர். உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் 110 மதிப்பெண் எடுத்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பில் அடிப்படையில் 196 மதிப்பெண்கள் கூடுதலாகச் சேரும்போது மொத்தம் 306 மதிப்பெண்ணை அவர் பெறுவார். அப்படிப் பார்த்தால் அவருக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், அதேநேரம் ஆங்கில வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில்தான் நீட் தேர்வு தொடங்கப்பட்டது. தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர், பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் 196 கூடுதல் மதிப்பெண்ணை அவருக்கு அளித்தால், அவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும். மொத்த உள்ள 180 கேள்விகளில் 49 கேள்விகள் போக மீதம் உள்ள 131 கேள்வியை தவறாக எழுதிய மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்தால், எந்தக் காரணத்துக்காக நீட் தேர்வு தொடங்கப்பட்டதோ அந்தக் காரணம் புறம் தள்ளப்பட்டுவிடும். 24,720 மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண் வழங்குவது தவறானது என நாங்கள் சொல்லவில்லை. ஆங்கில வழியில் தேர்வு எழுதிய தரமான மாணவர்கள் புறம் தள்ளப்பட்டுவிடக் கூடாது என நினைக்கிறோம். 

இதற்குச் சரியான தீர்வாக, தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளை மட்டும் மீண்டும் எடுத்து, 131 கேள்விக்கு அவர்கள் எத்தனை சரியான விடைகளை எழுதியுள்ளனர் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை சதவிகித அடிப்படையில் பிரித்து, தவறான கேள்விகளுக்கு அந்த மதிப்பெண்ணை வழங்க வேண்டும். இதனால், தமிழ் மொழியில் எழுதிய மாணவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள்; பிற மொழியில் எழுதிய மாணவர்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதன் மூலம், அனைத்து மாணவர்களுக்கும் சரியான தீர்வைக் கொடுக்க முடியும். இது ஒன்றுதான் மத்திய, மாநில அரசுகளுக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள்" என்றார். 

ஆனால், இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய மூத்த கல்வியாளர் பேராசிரியர் சிவக்குமார், "மொழிபெயர்ப்பு குளறுபடிக்கு மத்தியசிவக்குமார் நீட் அரசும் மாநில அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். 'தமிழக அரசு திறனான மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கவில்லை' என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சொல்கிறார். மத்திய அரசின் இந்தக் குற்றச்சாட்டுக்குத் தமிழக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்துவருகிறது. தமிழ் வழியில் படித்த மாணவர்களைத் தமிழக அரசு பலிவாங்கிவிட்டது. தமிழ் வழியில் பயின்ற அரசுப் பள்ளி மாணவர்கள், மாநில அரசாங்கத்தை நம்பித்தான் நீட் தேர்வை எழுதினர். இந்தக் குளறுபடியால் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர். நீட் தொடர்பாகத் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களிடம் தெளிவாக விவரிக்க வேண்டியது அரசின் கடமை. நீட் வினாத்தாளில் இருந்த குளறுபடிக்கு தீர்வு காண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்வை நோக்கிச் செல்கிறார் சி.பி.எம் கட்சியின் எம்.பி டி.கே ரங்கராஜன். அதற்கான, தீர்வையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் மீது அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், இந்த வழக்கில் தன்னுடைய கருத்தை முன் வைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு செய்யவில்லை. நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது எனக் கல்வியாளர்கள் பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைக்கின்றனர். இதைப் பள்ளிக் கல்வித் துறையும் சுகாதார நலத்துறையும் கண்டுகொள்ளவில்லை. எனவே, தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்குச் சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், தமிழக அரசு சட்டரீதியாகப் போராட வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!