ஆணவக் கொலைகளைத் தடுத்திட மாவட்டங்களில் சிறப்புப் பிரிவு! தமிழக அரசு பதில்

சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்திட அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் சாமுவேல்ராஜிடம் பேசும்போது, ''மதுரை மாவட்டம், உசிலம்பட்டி விமலாதேவி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த திலீப்குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டதால் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். விமலா தேவியின் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் எனத் திலீப்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சாமுவேல் ராஜ் இவ்வழக்கில் 13.04.2016 அன்று சென்னை உயர் நீதிமன்றம், சாதி ஆணவப் படுகொலையைத் தடுத்திட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப் பிரிவு அமைத்திடவும் இந்தச் சிறப்பு பிரிவுக்கு 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச தொலைபேசி எண் வழங்கிடவும், உயிர் அச்சத்தில் இருக்கும் தம்பதியினரோ காதலர்களோ இந்தத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பாதுகாப்பைக் கோரலாம். இவ்வாறு வரும் புகார்களைத் தொடர்புடைய காவல் நிலையத்தில் புகாராகப் பதிவு செய்து அச்சத்தில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். இவர்களுக்கு அரசு செலவில் பாதுகாப்பான தங்குமிடம் உறுதி செய்திட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்திடாத நிலையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புப் பிரிவு அமைத்திட வேண்டும் என நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இலவச தொலைபேசி எண்ணுடன்கூடிய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என அதற்கான பட்டியலுடன் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இது ஒரு நல்ல முயற்சி'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!