``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்?’’ - விளாசும் திருமாவளவன் | "Why Edappadi Palaniswami is not going against modi" asks Thirumavalavan

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (21/07/2018)

கடைசி தொடர்பு:19:40 (21/07/2018)

``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்?’’ - விளாசும் திருமாவளவன்

``ஜெயலலிதாவைவிட கெட்டிக்கார பழனிசாமி, மோடிக்கு அடிமையாக இருப்பது ஏன்?’’ - விளாசும் திருமாவளவன்

``வேண்டாம்..! வேண்டவே வேண்டாம்..!'' என்று அறைகூவல் விடுத்து `சேலம் டூ சென்னை' 8 வழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில்,நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே கண்டனப் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருந்தார்கள்.

இக்கூட்டத்தில் பேசிய சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன், ``சேலம் டூ சென்னை 8 வழிச் சாலை அபாயகரமானது, ஆபத்தானது. விவசாயிகளுக்கு எதிரானது. அதனால் இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்'' என்றார்.

அடுத்துப் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், ``நிலங்கள் இங்கு பலருக்கு வாழ்க்கையாக இருக்கிறது. தினந்தோறும் பட்டா கேட்டு பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் தொழிற்சாலை கட்டுவதற்கு கேட்கவில்லை. வேளாண்மை செய்ய கேட்கவில்லை. ஒரு குடிசை போட்டு வாழ்வதற்கு கேட்கிறார்கள். அவர்களின் குரல்கள் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு எட்டாமலேயே இருக்கிறது. குடிநீர் கேட்டு பல ஆண்டுகளாகப் பலர் போராடுகிறார்கள். கிடைத்தபாடில்லை. இதையெல்லாம் செய்து கொடுக்க முடியாத வக்கற்ற அரசு முதலாளிகள் சம்பாதிப்பதற்காக அவசர அவசரமாக நிலங்களைக் கையகப்படுத்திக் கொடுக்கிறார்கள்.

திருமாவளவன்

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அற்புதமான 3 திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். 

1. நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம். 

2. தகவல் பெறும் உரிமைச் சட்டம். 

3. நிலம் கையகப்படுத்தும் சட்டம். 

இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் சிறப்பு அம்சம்... ஒரு தனியார் நிறுவனம், நிலம் கையகப்படுத்த 80 விழுக்காடு மக்களின் ஒப்புதல் இருக்க வேண்டும். பொது நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்தினால் 70 விழுக்காடு மக்களின் ஒப்புதல் இருக்க வேண்டும்.

ஒப்புதல் அளித்து நிலம் எடுக்கப்பட்டாலும் சந்தை மதிப்பிலிருந்து 2 மடங்கு நிதி வழங்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய முயற்சி செய்தது. நாடு முழுவதும் பெரிய போராட்டம் வெடித்ததையடுத்து அதைக் கைவிட்டு அச்சட்டத்தில் புதிய திருத்தங்களைக் கொண்டு வந்து கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது. அதனால் மக்களிடம் கேட்காமலேயே அவர்களின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த மக்கள் விரோத திட்டத்தை திருமா தடுத்து நிறுத்துவார்'' என்றார்.

இறுதியாகப் பேசிய திருமாவளவன், ``இக்கூட்டம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானது அல்ல. அவரைப் பாதுகாக்கவே இந்தக் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. முதல்வர் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. தமிழக மக்கள் யாரும் 8 வழிச் சாலை கேட்கவில்லை. மோடி திணிக்கிறார். எடப்பாடியால் எதிர்க்க முடியவில்லை. சேலம் டூ சென்னைக்கு 2 1/2 மணி நேரத்தில் போகலாம் என்பது சுத்தப் பொய். இந்த 8 வழிச் சாலையைப் படப்பையில் இணைக்கிறார்கள். அங்கிருந்து சென்னை செல்லவே 1 1/2 மணி நேரம் ஆகும். சேலம் டூ உளுந்தூர்பேட்டை ரோட்டை சரிசெய்தாலே போதும். பசுமையை அழித்து பசுமை வழிச் சாலை போடுகிறார்களாம்.

திருமாவளவன்

எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமலேயே பல திட்டங்கள் நடக்கின்றன. அவருக்குத் தெரியாமலேயே அவருடைய உறவினர்கள் வீட்டில் ரெய்டு நடக்கிறது. எடப்பாடிக்கும் மோடி அரசுக்கும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடிக்குப் பதிலாக அந்த இடத்துக்கு வேறு ஒருவரைக் கொண்டு வர முயற்சி நடக்கிறது. பன்னீர்செல்வம், முதல்வராக தலைமைச் செயலகத்தில் இருந்தபோது வருமான வரித்துறையினர் தலைமைச் செயலகத்துக்குள் புகுந்து தலைமைச் செயலாளரின் அலுவலகத்தில் ரெய்டு நடத்தினார்கள். இது இந்திய வரலாற்றிலேயே இல்லை. தமிழகத்தில் மோடியின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருக்கடியில் இருக்கிறார்.

எங்களுக்கும் எடப்பாடிக்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. நாங்கள் கொள்கை கோட்பாட்டோடு எதிர்நிலை அரசியலைச் செய்து கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது. இந்தச் சாலை போட்டால் வளர்ச்சி அடையும் என்று என்ன உத்தரவாதம் அவர்களால் கொடுக்கமுடியும்.

மோடி கார்ப்பரேட்டின் செல்லப் பிள்ளை. அவருடைய நண்பர் அனில் அகர்வாலின் நிறுவனம் தூத்துக்குடியில் பாதிக்கப்படுகிறது என்றதும் போலீஸை விட்டு சுடச் சொன்னது மோடி. எடப்பாடிக்கு இது தெரியாது என்று அவராகவே சொல்லியிருக்கிறார். உள்ளபடியே எடப்பாடி பழனிசாமி கெட்டிக்காரர். ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் படித்த சசிகலாவையே பின்னுக்குத் தள்ளி அரசியல் செய்கிறார் என்றால் எடப்பாடி கில்லாடி. ஆனால், மோடிக்கு அடிமையாக இருக்கிறார். 8 வழிச் சாலை போட்டால், வெகு ஜன மக்கள் போராட்டம் வெடிக்கும் என்பது எடப்பாடிக்கும் தெரியும். 20 விழுக்காடு கமிஷனுக்காக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடியை பற்றி பேசிய திருமாவளவன்

பெட்டிக்கடை , கல்விக் கடன், விவசாயக் கடன் கேட்டால் வங்கியில் கடன் கொடுக்க மாட்டார்கள். கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கேட்காமலேயே கடன் கொடுப்பார்கள். மோடியின் நண்பர் அதானி தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். அவர் சென்னை எண்ணூரில் மிகப் பெரிய துறைமுகத்தைக் கட்டுகிறார். அந்தத் துறைமுகத்தோடு தமிழகத்தில் உள்ள அனைத்துச் சாலைகளும் இணைக்கப்படுகின்றன.

குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது இந்த அதானி சாதாரண சிறு தொழில் முதலாளியாக இருந்தவர். இன்று உலகமே அறியும் அளவுக்குப் பெரிய கார்ப்பரேட் முதலாளியாக மாறியிருக்கிறார் என்றால், அதற்குப் பின்புலமாக இருப்பவர் மோடி. உலகத்தில் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அதானிக்குக் குறைந்த விலையில் நிலமும், குறைந்த வட்டியில் பணமும் கொடுக்கப்படுகிறது.

சேலம் கஞ்சமலையில் உள்ள விலை மதிக்க முடியாத கனிமங்களை வெட்டி நேரடியாக துறைமுகத்துக்கு எடுத்துச் செல்வதற்கே இந்த 8 வழிச் சாலை போடப்படுகிறது. இந்த மண், மலை, நீர், கனிமங்கள் நமக்கு மட்டும் சொந்தமில்லை. அடுத்த தலைமுறைக்கும் சொந்தமானது. அதை அழிக்க யாருக்கும் அதிகாரமில்லை. இந்த மக்கள் விரோத திட்டத்தை மக்களோடு இணைந்து முறியடிப்போம்'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்