வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (21/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (21/07/2018)

5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - ராமநாதபுரம் அருகே 60 வயது முதியவர் கைது

ராமநாதபுரம் அருகே 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்த பக்கத்து வீட்டு 60 வயது முதியவரை அனைத்து மகளிர் காவல்நிலையப் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி. முதியவர் கைது

 

சிறுமிகளும் இளம் பெண்களும் பாலியல் சீண்டல்களுக்கும் பாலியல் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வரும் செய்திகள் தினம் தினம் வந்துகொண்டே இருக்கின்றன. பள்ளி ஆசிரியர் தொடங்கி காவலர் வரை இத்தகைய செய்கைகளில் ஈடுபட்டு வருவது இன்னும் கொடுமையானது. இத்தகைய கொடுமைகளுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைக் காட்டி வந்தாலும் இத்தகைய சீண்டல்கள் நின்றபாடில்லை.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஆதங்கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு, பக்கத்து வீட்டில் இருந்த முதியவரான பெரியகருப்பன் மகன் பி.குமரய்யா (60) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த 5 வயது சிறுமியின் அழுகையைக் கேட்ட பின்னர், சிறுமியிடம் நடந்த சம்பவத்தைப் பெற்றோர் கேட்டு அறிந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியின் பெற்றோர், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, அக்குழுவின் தலைவரான ஆர்.சகுந்தலா கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குமரய்யா மீது புகார் செய்தார். புகாரைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் யமுனா வழக்கு பதிவு செய்து குமரய்யாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.