வெளியிடப்பட்ட நேரம்: 21:59 (21/07/2018)

கடைசி தொடர்பு:21:59 (21/07/2018)

கட்டுக்கட்டாக எரிக்கப்பட்ட பாேக்குவரத்துக்கழக ஆவணங்கள்! - முறைக்கேட்டை மறைக்க எரிக்கப்பட்டதா?

கரூர் அரசுப் போக்குவரத்துப் பணிமனை மற்றும் கும்பகோணம் கோட்டம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆவணங்கள் கட்டுக்கட்டாக எரிக்கப்பட்டுள்ள சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. `ரெய்டுக்குப் பயந்து பிரச்னைக்குரிய முக்கிய ஆவணங்கள் காட்டுப் பகுதியில் எரிக்கப்பட்டிருக்கலாம்' என்று சிலர் சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள்.

ஆவணங்கள்

கரூர் மாவட்டம், மணவாசியை அடுத்துள்ள கோரக்குத்து என்ற குக்கிராமத்தின் காட்டுப் பகுதியில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் ஆவணங்கள் மூன்று இடங்களில் தனித்தனியாகப் போட்டு சிலர் எரித்துள்ளனர். பல ஆவணங்கள், நோட்டுகள் முழுமையாக எரிந்த நிலையிலும் சில ஆவணங்கள் பாதி எரிந்த நிலையிலும் இருந்தன. அதைச் சிலர் பார்த்துவிட்டு அங்கே சென்றிருக்கிறார்கள். அவர்களைக் கண்ட ஊழியர்கள், எரிந்த ஆவணங்களை விட்டுவிட்டு, கைகளில் எரிக்க வைத்திருந்த ஆவணங்களை எடுத்துக்காெண்டு வாகனத்தில் ஏறி பறந்துவிட்டர்களாம். இந்தச் சம்பவம்தான், 'பாேக்குவரத்துக் கழகத்தில் நடந்த முறைகேட்டை மறைக்க இப்படி ஆவணங்களை எரித்திருக்கிறார்கள்' என்ற பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது. 

ஆவணங்கள்

இதுபற்றி நம்மிடம் பேசிய விபர பார்ட்டிகள் சிலர், "தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை மற்றும் துறை சார்ந்த ரெய்டுகள் நடந்து வருகிறது. அதாேடு, பாேக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரைச் சேர்ந்தவர். நேற்று அ.ம.மு.கவைச் சேர்ந்த புகழேந்தி, 'எடப்படி ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. பாேக்குவரத்துக் கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழலை விரைவில் வெளிக் காெணர்வாேம்'ன்னு பேசினார். இன்றைக்கு கரூர்ல இப்படி கட்டுக்கட்டான ஆவணங்களை எரித்துள்ளார்கள். அதனால், துறையில் நடந்துள்ள முறைகேட்டை மறைக்க போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான பிரச்னைக்குரிய முக்கியமான ஆவணங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம் எனப் பொதுமக்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். 'எரிக்கப்பட்ட ஆவணங்கள் தேவையில்லாத ஆவணங்கள். இடத்தை அடைக்குதேன்னு ஊழியர்கள் எரித்துள்ளதாகப் பாேக்குவரத்துக் கழகத்தில் சாெல்றாங்க. அப்படித் தேவையில்லாத பேப்பர்களாக இருந்தால், அவற்றை எடைக்குப் போட்டிருந்தால்கூட ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்திருக்கும். அப்படி இருக்கும்போது போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான ஆவணங்கள் கட்டுக்கட்டாக எரிக்க காரணம், முறைகேட்டை மறைக்கவே. எனவே, எரிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும" என்றார்கள்.