வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (21/07/2018)

கடைசி தொடர்பு:23:30 (21/07/2018)

`சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை!’ - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். 

பட்டமளிப்பு விழா

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தனது உரையின் போது தமிழ்மொழி வளர்ச்சி சார்ந்த ஏராளமான அறிவிப்புகளை வழங்கினார். அப்பொழுது, தமிழ் இலக்கண ஆசான் தொல்காப்பியருக்கு விரைவில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார். இது தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகாற்சோழன் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், லோக் அதாலத் தலைவர் நீதியரசர் வள்ளிநாயகம், தமிழ் ஆட்சிமொழி தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். இதில் உரையாற்றிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ‘’இந்தி பிரச்சார சபா தொடங்குவதற்கு முன்பு 32 கோடி பேர்தான் இந்தி பேசினார்கள். அது தொடங்கப்பட்ட பிறகு 52 கோடி பேர் இந்தி பேசினார்கள். அதுபோல், தமிழ் மொழியை வளர்த்தெடுக்கவும் பரவலாகக் கொண்டு செல்லவும், முதல்கட்டமாக 26 இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்கப்போகிறோம். இதன் மூலம் குறைந்தபட்சம் 10 லட்சம் மாணவர்களாவது பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதுமட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் பண்பாட்டு மையங்களை உருவாக்கப் போகிறோம். யுனெஸ்கோ நிறுவனம் மூலம் திருக்குறளை ’புக் ஆஃப் த வேர்ல்டு’ என அறிவிப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கியுள்ளோம். தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் விரைவில் சிலை அமைப்பதற்கான ஏற்பாடும் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.