சென்னையில் கட்டுமானப் பணியின்போது தனியார் மருத்துவமனைக் கட்டடம் இடிந்து விபத்து!

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையின் 4 மாடி கட்டட தூண் சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. கட்டட இடிபாடுகளில் தொழிலாளர்கள் 35 பேர் சிக்கியதாகவும் அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்டட விபத்து

சென்னை கந்தன்சாவடி பகுதியில் தனியார் மருத்துவமனையின் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. கட்டடத்தின் 4 வது மாடியில் ஜெனரேட்டர் வைப்பதற்கான பணிகளில் தொழிலாளர்கள் சுமார் 40 பேர் காலை முதல் ஈடுபட்டு வந்தனர். மாலையில் 20 பேர் மட்டும் பணிபுரிந்துகொண்டிருந்தனர். அப்போது, மாலை 6.30 மணியளவில் திடீரென கட்டடத்தின் தூண் மற்றும் சாரம் ஆகியவை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தன. அந்தக் கட்டடத்தில், இரும்புப் பொருள்கள் மற்றும் சிமென்ட் கலவைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்த விபத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 20 பேர் சிக்கி காயமடைந்தனர்.

கட்டட விபத்து

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களில் முதற்கட்டமாக 10 பேரும் அடுத்தகட்டமாக 7 பேரும் மீட்கப்பட்டனர். அவர்கள் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்த பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்டட இடிபாடுகளில் சிக்கிய 20 பேரில் 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!