வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (22/07/2018)

கடைசி தொடர்பு:02:00 (22/07/2018)

``நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியது சிறப்பு வாய்ந்தது!''  - வைகோ புகழாரம்

``நாடாளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது சிறப்பு வாய்ந்தது'' என ம.தி.மு.க. பொதுச் செயலாள வைகோ புகழாரம் சூட்டியுள்ளார்.

வைகோ

திருச்சியில் நேற்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த வைகோ செய்தியாளர்களிடம்  பேசியபோது, ``பெரியார் மற்றும் அண்ணா பிறந்த நாள் விழா, ம.தி.மு.க-வின் வெள்ளி விழா, எனது அரசியல் பொதுவாழ்வின் பொன்விழா என முப்பெரும் விழா ஈரோட்டில் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற  இருக்கிறது. இதறகான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, மாவட்ட மற்றும் மண்டல அளவில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்குப் பேச்சுப் போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. ஈரோட்டில் நடைபெறும் முப்பெரும் விழா, ம.தி.மு.க-வுக்கு பெரும் உந்துதலாக இருக்கும் என நம்புகிறோம். நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியது மிகச் சிறந்தது பேச்சாகும். விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தலைவர்களின் பேச்சுகள் கடந்த நான்காண்டுக் கால பி.ஜே.பி. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியிருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து, பி.ஜே.பி-க்கு ஆதரவாக அ.தி.மு.க. செயல்பட்டிருப்பது எதிர்பார்த்ததுதான். அதேநேரத்தில் சிவசேனா, பிஜுஜனதாதளம் போன்ற கட்சிகள் வெளிநடப்பு செய்தது எதிர்பாராததுதான். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக எடுக்கப்பட்ட குறும்படத்தை மக்கள் மத்தியில் ஒளிபரப்புகிறார்கள். பத்திரிகைகளில் விளம்பரம் செய்தல், குறும்படம் எடுத்து வெளியிடுதல் போன்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பிரசாரத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கில், என்னுடைய மனுவை ஏற்கக்கூடாது என அந்த ஆலையின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிடுகிறார். மற்ற மனுக்கள் மீது எதிர்ப்பு தெரிவிக்காமல் என் மனுமீது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? ஜூலை 30-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது நான் நேரில் ஆஜராகி வாதாடுவேன். நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தமிழில் தேர்வெழுதியவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கும்படி சென்னை உயர்  நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது. எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், மாணவ - மாணவிகள் கவலையடைந்திருக்கும் நிலையில், அவர்கள் தலையில் கல்லைப் போடுவதுபோல தடை விதித்திருக்கிறார்கள்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க