``அமித் ஷா சொன்னதால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்தோம்!'' - செல்லூர் ராஜு ஓபன் டாக்!

``பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கும்படி மாநில அரசைக் கேட்டுக்கொண்டதால் நாங்கள் ஆதரவளித்தோம்'' என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் ஆழ்துளை குடிநீர்க் குழாய் சேதமடைந்ததை, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று (21-ம் தேதி) ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மக்களவையில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்காவிட்டாலும் பி.ஜே.பி. வெற்றிபெற்றிருக்கும். ஏனெனில், நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய பலத்துடன் பி.ஜே.பி. உள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, அ.தி.மு.க-வை ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்தாலோசித்து தமிழகத்தின் நலன் கருதி நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். தமிழக அமைச்சர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இதனால், மத்தியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசுக்கு பாதகம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது எங்களது நோக்கம். அதற்காக மாநிலத்தின் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டோம். கோரிக்கையை முன்வைப்பது எங்களது கடமை'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!