வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (22/07/2018)

கடைசி தொடர்பு:08:17 (23/07/2018)

`விளைபொருள்களை அரசுப் பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்லலாம் ' - தமிழக அரசு அறிவிப்பு!

லாரிகள் ஸ்ட்ரைக் நீடிப்பதால் விவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும். அதற்கு பதிலாக வருடத்துக்கு ஒருமுறை சுங்கக் கட்டணமாக நாடு முழுவதும் 18 ஆயிரம் கோடி ரூபாய் தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணய முறையை மாற்றி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிப்பதோடு அதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டாம் நாளாக இன்று லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 65 லட்சம் லாரிகள் இந்த ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் விவசாய விளைபொருட்களை அரசு பேருந்துகளில் இலவசமாக ஏற்றிச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ``லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசுப்பேருந்துகளில் இலவசமாக ஏற்றி செல்லலாம். இதற்காக கட்டணம் வசூலிக்கக்கூடாது என அனைத்து போக்குவரத்து கழக மேலார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரிகள் ஸ்ட்ரைக்கால் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் தேக்கம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க