இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - 2 பேர் கைது..! | Chidambaram Duplicate Job Order 2 Person Arrest News

வெளியிடப்பட்ட நேரம்: 13:15 (22/07/2018)

கடைசி தொடர்பு:13:15 (22/07/2018)

இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - 2 பேர் கைது..!

இந்திய உணவுக் கழகத்தில் இளைஞர்கள் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி போலி நியமன ஆணை வழங்கி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சிதம்பரம் போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் மூளையாக செயல்பட்ட பெண்ணை தேடி வருகின்றனர். 

கடலூர் மாவட்டம்  புவனகிரி அருகே உள்ள உளுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் இளந்தீபன்(33). இவரிடம் சிதம்பரம் சிலுவைபுரம் பகுதியை சேர்ந்த இளங்கோ மகள் சோபியா(36) என்பவர் இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 5 லட்சம் கேட்டுள்ளார். இதனை நம்பிய இளந்தீபன் பல்வேறு தவணைகளில் ரூ 3.50 லட்சம் பணத்தை சோபியாவிடம் கொடுத்துள்ளார். பிறகு சோபியா, இளந்தீபனிடம் பணி நியமன ஆணை வழங்கியுள்ளார். இந்த ஆணை போலியானது என்பதை தெரிந்துகொண்ட இளந்தீபன் இது குறித்து சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிதம்பரம் தாலுகா இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் போலீஸார் சோபியா மற்றும் அவருக்கு உடைந்தையாக இருந்த ஆரோக்கியசெல்வி ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸார் நடத்திய விசாரணையில் சோபியா இந்திய உணவுக் கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாக பணிபுரிவது போல் போலியான அடையாள அட்டை வைத்துக்கொண்டு வேலை தேடும் இளைஞர்களிடம் இந்திய உணவுக் கழகத்தில்  வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சங்கள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கடலூரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் செரகால்பட்டு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன்(34) என்பவர் மூலம் போலியான பணி நியமன ஆணைகளை தயார் செய்து வழங்கியுள்ளார். இந்த பணி ஆணை வழங்கப்பட்டவர்களுக்கு விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் சோபியா தனது போலியான அடையாள அட்டையைக் காட்டி பல ரேசன் கடைக்களுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சோபியாவுக்கு உடந்தையாக இருந்த ஆரோக்கியசெல்வி, கடலூரில் ப்ரௌசிங் சென்டர் நடத்தி வரும் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். முக்கிய நபரான சோபியா தலைமறைவாகிவிட்டார். முன்னதாக நடந்த சோதனையில் போலியான பணி நியமன ஆணைகள் மற்றும் விருத்தாசலத்தில் நடந்த பயிற்சி சான்றிதழ்கள், இந்திய உணவுக் கழக ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த மோசடியில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 100க்கணக்கான இளைஞர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, தப்பி சென்றுள்ள முக்கிய நபரான சோபியாவை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.