வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (22/07/2018)

கடைசி தொடர்பு:07:44 (23/07/2018)

``பாப்பம்மாளுக்கு கிடைத்தது முழு வெற்றியல்ல!" - 'எவிடென்ஸ்' கதிர்

அவினாசி அருகில் உள்ள திருமலைகவுண்டன்பாளையம் அரசு உயர்நிலை

''சமையல் பணியாளர் பாப்பம்மாள் சமைக்கக்கூடாது என்று, சாதி ரீதியான தீண்டாமை வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அரசும், போலிஸும் தந்திரத்தைக் கையாண்டுள்ளது. இதனால், பாப்பம்மாளுக்கு முழுமையான நீதி கிடைக்காது'' என்று எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் குற்றம் சாட்டியுள்ளார். 
 

இதுபற்றி நம்மிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், ''இந்த பிரச்னையில் காவல்துறை வழக்கு பதிவு செய்ததை, பாப்பம்மாளுக்கு கிடைத்த வெற்றியாக எல்லோரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது அப்படியல்ல. போலீஸார் தரப்பில் சதி நடந்திருக்கிறது. கல்வி நிறுவனம், மருத்துவமனை உள்ளிட்ட பொது நிறுவனங்களை பட்டியல் வகுப்பினர் பயன்படுத்த அனுமதி உண்டு. சாதிரீதியாக அங்கே வரக்கூடாது என்று மிரட்டப்பட்டால், தடுக்கப்பட்டால் அவ்வாறு செய்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 பிரிவு 3(1)(d) கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதேபோன்று, எந்தவொரு பட்டியல் சமூகத்தினரும் தொழில், வர்த்தகம், அரசுப் பணி போன்றவற்றில்  ஈடுபடலாம். அதை சாதி ரீதியாக தடுத்தால் குற்றவாளிகள் மீது பிரிவு 3(1) (e) கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதே போன்று பட்டியல் வகுப்பைச் சேர்ந்த பெண் தாக்கப்பட்டாலோ, பாலியல் ரீதியாக இழிவாகப் பேசப்பட்டாலோ குற்றவாளிகள் மீது 3(1) (w1) கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆனால், பாப்பம்மாள் பிரச்னையில் இந்த 3 பிரிவுகளையும் போலீஸார் பதிவு செய்யாமல், சாதியைச் சொல்லி திட்டியதாக மட்டும் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

பாப்பம்மாள்

பாப்பம்மாள் மீது வன்முறையைத் தொடுத்தவர்கள் மொத்தம் 87 பேர். இந்த 87 பேரும் சாதியைச் சொல்லி திட்டியிருக்கமாட்டார்கள். இந்த 87 பேரில் பெரும்பாலானோர், பாப்பம்மாள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர் என்று தெரிந்து சாதிய ரீதியாக 'உள்ளே வரக்கூடாது' என்று மிரட்டியிருப்பார்கள். சிலர் குறிப்பிட்ட சாதியை நேரடியாக வெளிப்படையாகக் கூறி திட்டியிருப்பார்கள். ஆனால், எல்லோரும்  சட்டத்தின்படி வன்கொடுமைக் குற்றவாளிகள். மேற்குறிப்பிட்ட 3 பிரிவுகளையும் இணைத்திருந்தால் யார், யார் எந்த குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று பிரித்து விசாரணையை நடத்த வேண்டும். தந்திரமாக எல்லோரும் சாதியைச் சொல்லி திட்டினார்கள் என்கிற பிரிவை மட்டும் பயன்படுத்துவதினால், மற்ற வன்கொடுமைகள் நடக்கவில்லை என்பதுபோன்று வழக்கினைப் பதிவு செய்திருக்கிறார்கள். 

அரசு ஊழியர் ஒருவர் சாதி ரீதியிலான வன்கொடுமையில் ஈடுபட்டால் அதைத் தடுக்க வேண்டியது மேல் அதிகாரிகளின் கடமை. தடுக்கத் தவறினால் மேல் அதிகாரிகளும் குற்றவாளிகள். ஆகவே, மேல் அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதற்காக குறிப்பிட்டவர்கள் மீது மட்டும் சாதியைச் சொல்லி திட்டியதாக வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இதுபோன்ற பெரிய எண்ணிக்கையில் உள்ள குற்றவாளிகளை வகைப்படுத்தும்போது முதல் தகவல் அறிக்கை(FIR) குற்றத்திற்கு தகுந்தாற்போன்று துல்லியமாகப் பிரித்து எழுதப்பட வேண்டும். எல்லோரும் சாதியைச் சொல்லி திட்டினார்கள் என்பதன் மூலம் இந்த வழக்கினை நீர்த்து போகச் செய்வதற்கான சதியில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆகவே, விடுபட்ட பிரிவுகளை, பாதிக்கப்பட்ட பாப்பம்மாளைக் கொண்டு புகாராக எழுதி இணைக்க வேண்டும். குற்றவாளிகளின் பட்டியலை விரிவாக தெளிவுபடுத்தியும் புகார் எழுதப்பட வேண்டும். அப்போதுதான் உரிய நீதி கிடைக்கும்.'' என்றார்.

பணிமாற்றம் செய்யப்பட்டிருந்த சத்துணவு பணியாளர் பாப்பம்மாள் மறுபடியும் அதே பள்ளிக்கூடத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்ட பாப்பம்மாளுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும், தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்