வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (22/07/2018)

கடைசி தொடர்பு:14:32 (22/07/2018)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளை நிற யானை வீதி உலா!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு வெள்ளை யானை முன் செல்ல,  சுந்தர மூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி  வீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது. 

வெள்ளை நிற யானை

ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கயிலாய மலைக்கு வெள்ளை யானையை அனுப்பி 63  நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வந்ததாக வரலாறு உண்டு. இதனை நினைவு கூறும் வகையில், திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெள்ளை யானை முன்னே செல்ல சுந்தரமூர்த்தி நாயனார் தங்கச் சப்பரத்தில் உலா வரும் வைபவம்  ஒவ்வொரு ஆண்டும் சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறுவது வழக்கம். 

இதனை முன்னிட்டு, இன்று அதிகாலையில் 5 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. திருக்கோயிலில் உள்ள யானையின் உடல் முழுவதும் விபூதி பூசப்பட்டு வெள்ளை நிற யானையாக மாற்றப்பட்டது.

தொடர்ந்து, தங்கச் சப்பரத்தில் சுந்தர மூர்த்தி நாயனார் கோயிலில் இருந்து புறப்பட்டது. வெள்ளை யானை முன் செல்ல, சுந்தர மூர்த்தி நாயனாரின் சப்பரம் பின் தொடர்ந்து சென்றது. திருக்கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், உள்மாட வீதிகள் மற்றும் ரத  வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் திருக்கோயிலை அடைந்தது. தொடர்ந்து உள் பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளை நிற யானை முன்பு, சேரமான் பெருமான் மற்றும் மாணிக்கவாசகர் ஆகியோர் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க