தேவதாசி சட்டம் கொண்டுவர சட்டமன்றத்தில் உறுதிகுரல் எழுப்பிய முத்துலட்சுமி ரெட்டி! #DrMuthulakshmiReddy | Memories about Dr. Muthulakshmi Reddy

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (22/07/2018)

கடைசி தொடர்பு:15:00 (22/07/2018)

தேவதாசி சட்டம் கொண்டுவர சட்டமன்றத்தில் உறுதிகுரல் எழுப்பிய முத்துலட்சுமி ரெட்டி! #DrMuthulakshmiReddy

பண்பாடு என்பதே காலம்தோறும் மாறிவருவதுதான். ஆனாலும், அதன் பெரும்பாலான கூறுகள், பெண்களை ஒடுக்கும் விதத்தில் இருப்பது கண்கூடு. உலகம் தழுவிய அளவிலும் இதேபோன்ற முறைகளே இருப்பதைப் பார்க்க முடியும். இதை எதிர்த்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பலர் போராடியுள்ளனர்; போராடி வருகின்றனர். கணவன் இறந்ததும், அவனை எரிக்கும் சிதையில் மனைவியையும் உயிரோடு எரிக்கும் உடன்கட்டை ஏறும் கொடும் வழக்கம், ராஜாராம் மோகன் ராய் உள்ளிட்டோரின் பெரும் முயற்சியால் முடிவுக்கு வந்தது. அதேபோல, பெண்களைப் பொட்டுக்கட்டி 'தேவதாசி' எனக் கோயிலுக்கு அர்ப்பணிக்கும் பழக்கம் நிலவிவந்தது. பெண்களை அடிமைப்படுத்தும் இந்த முறையை மாற்ற, தமிழகத்தில் பெரியார், மூவலூர் ராமாமிருதம் அம்மையார் உள்ளிட்டோர் போராடினார்கள். இறுதியாகத் 'தேவதாசி ஒழிப்புச் சட்டம்' நிறைவேறியது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.

முத்துலட்சுமி ரெட்டி  

1886 ஜூலை 30-ம் நாள், புதுக்கோட்டையில் பிறந்தவர், முத்துலட்சுமி. தந்தை பிரபல வழக்கறிஞராக இருந்தாலும், பெண்கள் கல்வி கற்பது அபூர்வமான காலம் அது. ஆனால், முத்துலட்சுமிக்கு படிப்பின் மீது பெரும் ஆர்வம். ஆனால், பள்ளிக் கல்வி முடிந்ததுமே திருமணம் செய்துவைக்கும் முயற்சி நடந்தது. இவர் கல்லூரிக்குச் செல்வதில் குறியாக இருந்தார். குடும்பத்தினர் இவரின் மேற்கல்வியை மறுத்ததற்கு முக்கியக் காரணம், புதுக்கோட்டைக் கல்லூரியில் பெண்கள் யாரும் வருவதில்லை. இன்னொரு காரணம், பெற்றோரிடம் பெரிய அளவில் பொருளாதார வசதியில்லை.

முத்துலட்சுமி தளர்ந்துவிடவில்லை. புதுக்கோடை மகாராஜாவின் உதவியோடு கல்லூரியையும் மருத்துவப் படிப்பையும் முடித்தார். ஒரு வரியில் இதைச் சொல்லிவிட்டாலும், அந்தக் காலகட்டத்தில் இது மாபெரும் விஷயம். முத்துலட்சுமிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்றால், அதன் பின்புலம் புரியும். கல்வி அறிவுப் பெறுகையில் அடிமைப்பட்டிருக்கும் தாய்நாட்டைப் பற்றியும் கவலைகொண்டார். சரோஜினி நாயுடு, பாரதியாருடன் உரையாடும் தருணங்கள் இந்த உணர்வை இன்னும் மேலெழுப்பின.

28 வயதில் மருத்துவர் டி.சுந்தர ரெட்டியைச் சடங்குகளைத் தவிர்த்து திருமணம் செய்துகொண்டார். தன்னுடைய விருப்பங்களுக்குக் குறுக்கே நிற்கக்கூடாது என்ற நிபந்தனையுடனே மணமுடித்தார். 1926-ம் ஆண்டு பாரீஸில் நடந்த அகில உலகப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, 'ஆண்களுக்கு நிகராக பெண்கள் நடத்தப்பட வேண்டும்' என முழங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில், நீதிக் கட்சியின் தலைவராக இருந்த பனகல் அரசரின் உதவியோடு, லண்டனுக்கு மேற்படிப்புக்குச் சென்றார். 1926-ம் ஆண்டு, பெண்களும் தேர்தலில் போட்டியிடும் உரிமை கிடைத்தது. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 

முத்துலட்சுமி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்ததன் மூலம், எண்ணற்றோரின் துயரங்கள் நீங்கின. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், இருதாரத் தடைச் சட்டம்,, பால்ய விவாகத் தடை சட்டம் ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு அளப்பரியது. அவற்றைவிட குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது, தேவதாசி ஒழிப்புச் சட்டம். இந்தச் சட்டம் வந்துவிடக் கூடாது எனச் சனாதானிகள் ஏராளமான குறுக்கு வேலைகளைச் செய்தனர். இந்தச் சட்டம் குறித்து, பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் எனச் சிலர் கூறிய யோசனைக்கு, தந்தை பெரியார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். 'குடியரசு' இதழில், 'ஒரு கணமும் எந்தக் காரணத்துக்காகவும் தாமதிக்கக்கூடாது' என உறுதிப்பட எழுதியிருந்தார்.

முத்துலட்சுமி ரெட்டி

காலம் காலமாக நாம் பின்பற்றும் வழக்கத்தையும் பண்பாட்டையும் மாற்றக்கூடாது என்றும், தேவதாசி என்பது கடவுளுக்கே பணி செய்யும் அற்புத விஷயம் என்றும் சட்டடபையிலே சிலர் பேசி, இந்தச் சட்டத்தை நிறுத்த முயன்றனர். அதற்குத் தகுந்த பதிலடியாக, 'கடவுளுக்கே செய்யும் பணி என்றால், இனிமேல் உங்கள் வீட்டுப் பெண்களைச் செய்ய சொல்லலாமே' என்றார் முத்துலட்சுமி. 

இந்தப் பதில் பலரையும் மெளனத்தில் ஆழ்த்தியது. தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. அதுவரை சொல்லொண்ணா இன்னல்களில் தவித்த தேவதாசிப் பெண்கள், விடுதலைக் காற்றைச் சுவாதித்தனர். சமூக நீதி வரலாற்றில் முத்துலட்சுமி ரெட்டிக்குச் சிறப்பான இடத்தையும் புகழையும் வழங்கியது இந்தச் சம்பவம். அதன்பின், பல்வேறு பதவிகளை வகித்தார். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்று உரை நிகழ்த்தினார். சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் புற்றுநோய்க்கு தனி மருத்துவமனை தேவை என்பதை வலியுறுத்தினார். இவரின் தொடர் முயற்சியால் 1952-ம் ஆண்டு, அடையாறு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அவரின் சாதனைகளின் பட்டியல் மிக நீளமானது.

1968 ஜூலை 22, முத்துலட்சுமி இயற்கை எய்தினார்.

பெண்கள் கையில் அதிகாரம் கிடைக்கும்போதே, சமூக நீதிக்கான பயணம் விரைவுபடுத்தப்படுகிறது என்பதற்கு முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை ஓர் உதாரணம். 1913-ம் ஆண்டில், அதாவது 100 ஆண்டுகளுக்கு முன்பே சடங்கு மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இவரின் பெயரில், 'டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு மண நிதி உதவித் திட்டம்' எனும் பெயரில், கலப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது. முத்துலட்சுமி ரெட்டிக்கு மத்திய அரசு, 'பத்ம பூஷண்' விருது அளித்தது. 


டிரெண்டிங் @ விகடன்