வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (22/07/2018)

கடைசி தொடர்பு:18:27 (22/07/2018)

சென்னை கந்தன்சாவடி கட்டட விபத்து - உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து

சென்னை கந்தன்சாவடியில் புதிதாக தனியார் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று கட்டடத்தின் 4 வது மாடியில் ஜெனரேட்டர் வைப்பதற்கான பணிகளில் தொழிலாளர்கள் சுமார் 40 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாலை 6.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக கட்டடத்தின் தூண் மற்றும் சாரம் ஆகியவை பாரம் தாங்காமல் சரிந்து விழுந்தன. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 35 பேர் இடிபாடுகளில் சிக்கிகொண்டனர்.   உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்றது. 

எனினும் இடிபாடுகளில் சிக்கி பீகாரைச் சேர்ந்த பப்லு என்பவர் உயிரிழந்தார். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்த கட்டுமான நிறுவனம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தனர். இதற்கிடையே, கட்டுமான விபத்தில் பப்லு என்பவர் உயிரிழந்துள்ளதற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.