சிறையில் நிர்மலா தேவிக்கு நூறாவது நாள்... ஜாமீனை முடக்குவது யார்? | Nirmala devi completes 100 days in prison

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (22/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (22/07/2018)

சிறையில் நிர்மலா தேவிக்கு நூறாவது நாள்... ஜாமீனை முடக்குவது யார்?

கடந்த 19 ஆம் தேதி சாத்தூர் நீதிமன்றம் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு

சிறையில் நிர்மலா தேவிக்கு நூறாவது நாள்... ஜாமீனை முடக்குவது யார்?

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத்  தவறான வழியில் செலுத்த முயன்ற வழக்கில், கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி  வருகிற 25 ஆம் தேதியுடன் மதுரை சிறையில் 100 வது நாளை எட்டுகிறார். கடந்த 19 ஆம் தேதி சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவிக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 6 முறை மனுத் தாக்கல் செய்தும் ஜாமீன் மறுத்து வருகிறது நீதிமன்றம். நிர்மலாதேவி வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி-யினர் கடந்த வாரம் குற்றப்பத்திரிகையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டனர். இருந்தாலும் நிர்மலாதேவிக்கும்  இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உதவிப்பேராசிரியர் முருகன், கருப்பசாமிக்கும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டே வருகின்றன. 

தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்த இந்த  விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி-யினர் ஆரம்பத்தில் காட்டிய பரபரப்பு, 200 -க்கும் மேற்பட்டவர்களிடம் செய்த விசாரணை  அனைத்தும் கடைசியில் இந்த மூன்று பேர்களுடன் வழக்கை முடிக்கத்தானா என்றக் கேள்வியை எல்லோரும் எழுப்பி வருகிறார்கள்.

தேவாங்கர் கல்லூரியில் பயிலும் நான்கு மாணவிகளை, உயர் கல்வித்துறை சார்ந்த முக்கியப் புள்ளிகளுக்கு அறிமுகம் செய்யும் வகையில் ஆசை வார்த்தைக் காட்டி நிர்மலாதேவி செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட  மாணவிகள், அந்தப் பேச்சை  பதிவு செய்து கல்லூரி நிர்வாகத்தில் புகார் செய்தனர். கல்லூரி நிர்வாகம் பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த  விவகராம் லீக் செய்யப்பட்டு அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஊடகத்தில் முதலில் வெளிவந்தது. அரசு தரப்பில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய  மாதர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தத் தொடங்கினர். அதில் அகில இந்திய மாதர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நிர்மலாராணி கலந்து கொண்டார். 

அதன் பின்புதான் இந்தப் பிரச்னையை விசாரிக்க அரசு உத்தரவு போட்டது. இந்த விவகாரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஆளுநர் மாளிகை மீதும் புகார்கள் எழுந்ததால், விவகாரம் தீயாய் பரவியது. பதறிப்போன ஆளுநர் பன்வாரிலால், உடனே செய்தியாளர் சந்திப்பினை நடத்தி தன்னிலை விளக்கம் கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல், இந்தப் புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானத்தையும் நியமித்தார். 

மாதர் சங்க நிர்வாகி வழக்கறிஞர் நிர்மலா ராணி பேசும்போது, ''இவ்விவகாரத்தில், பேராசிரியை நிர்மலாதேவி ஒரு கருவிதான். அவரை இயக்கி இதுபோல் மாணவிகளைத் தவறாக பயன்படுத்தப் பார்த்தவர்கள் யார் யாரென்பதை காவல்துறை கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் வேறு எங்கெல்லாம் நடைபெறுகிறது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். ஓய்வுபெற்ற பெண் கல்வியாளர்கள், நீதிபதிகளைக் கொண்டு இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் முழுமையான உண்மைகள் வெளியில் வரும். இல்லையென்றால், எல்லோரும் தப்பித்து விடுவார்கள் '' என்றார்.  அவர் சொன்னதுபோல்தான் தற்போது நடந்துள்ளது. நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோருடன் வழக்கு முடிக்கப்பட்டுள்ளது. 

நிர்மலாதேவி

இந்தப் பிரச்னை கிளம்பிய நேரத்தில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில், எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணை ஒருபக்கமும், ஆளுநர்  நியமித்த  சந்தானம் குழுவின் விசாரணை மறுபக்கமுமாக பரபரத்தது. அதேநேரம், புகாருக்குள்ளான மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினர் ஏற்பாடு செய்த வாகனத்தில் சந்தானம் செல்கிறார். விமர்சனத்துக்குள்ளாகியிருக்கும் துணைவேந்தரும், பதிவாளரும் அவரைச் சாதாரணமாக வந்து பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளும் அப்போது எழுந்தன. இதற்கிடையே சந்தானம் கமிஷன் நியமிக்கப்பட்டது முறையானது அல்ல என்று புரட்சிகர இளைஞர் இயக்கம் என்ற அமைப்பு  தாக்கல் செய்த வழக்கினால், சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் தடை போட்டது. 

இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில்தான் அருப்புக்கோட்டை காவியன் நகரில் இருக்கும் நிர்மலாதேவி வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது. அதில் பல ஆவணங்கள் காணாமல் போனதாக சொல்லப்பட்டது. இதுவரை அந்தச் சம்பவம் பற்றி காவல்துறை எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அடுத்ததாக நிர்மலாதேவியைக் குரல் சோதனைக்காக சென்னைக்கு அழைத்துச் செல்ல சி.பி.சி.ஐ.டி. விருதுநகர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது.  'சென்னை செல்லத் தேவையில்லை, மதுரை சிறையிலேயே குரல் சோதனையை செய்யவும்' என்று  நீதிபதி மறுத்தார். அடுத்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுச்செய்து நிர்மலாதேவியை சென்னைக்கு அழைத்துச் சென்றார்கள்.  

நிர்மலாதேவி வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அவசர அவசரமாக 1,160 பக்கமுள்ள இடைக்கால குற்றப் பத்திரிகையை சி.பி.சி.ஐ.டி-யினர் விருதுநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். 

நிர்மலாதேவி மீது போடப்பட்டுள்ளது பெயிலில் விடக்கூடிய சாதாரண வழக்குகள்தான். முக்கியப் புள்ளிகள் இந்த விவகாரத்தில், தப்பித்து விட்டார்கள் என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து மறையாமல் இருக்கிறது. எனவே நிர்மலாதேவி, வெளியில் வந்து 'என்னதான் நடந்தது' என்பது பற்றிய உண்மையைச் சொல்லிவிடுவார் என்ற பயத்திலேயே அவரை வெளியில் விட சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும், நிர்மலாதேவி விவகாரத்தில் இன்னும் முழுமையாக உண்மைகள் வெளிவரவில்லை. சி.பி.சி.ஐ.டி-யினரின் விசாரணை நிர்மலாதேவியை மட்டும் குற்றவாளியாக்கும் வகையிலேயே அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், 6 முறை நிர்மலாதேவி ஜாமீன் கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது. வருகிற 25 ஆம் தேதி மதுரை மகளிர் சிறையில், 100-வது நாளை எட்டுகிறார் நிர்மலாதேவி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்