வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (22/07/2018)

கடைசி தொடர்பு:16:04 (22/07/2018)

மதுரை அருகே ரப்பர் மில் அதிபர் காரில் கடத்தல்! - சிவகங்கை அருகே மீட்பு

மதுரை மாவட்டம் மேலுர் அருகே செயல்பட்டு வரும் ரப்பர் தொழிற்சாலை அதிபர் மற்றும் அவரது உதவியாளர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

மேலுரை அடுத்த அரிட்டாபட்டியில் சூப்பர் ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையின் உரிமையாளர் ஜோசப் மேத்யூ. ஜோசப் மேத்யூ, தனது உதவியாளர் மாத்தாய் உடன் மதுரையிலிருந்து அரிட்டாபட்டியிலுள்ள ரப்பர் தொழிற்சாலைக்குச் சென்று கொண்டிருந்தார். காரை சியாம்லா என்பவர் ஓட்டினார்.  நரசிங்கம்பட்டி அருகே இவர்கள் கார் சென்று கொண்டிருந்தபோது, காரின் மீது மோதுவது போல் மற்றொரு காரில் வந்தவர்கள் காரை நிறுத்தியுள்ளனர். காரை வழிமறித்து நிறுத்தியுடன், ஜோசப் உள்ளிட்டோருடன் அந்த காரில் வந்தவர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாகக் காரில் வந்தவர்கள் ஜோசப் மேத்யூ மற்றும் உதவியாளர் மாத்தாய் ஆகிய இருவரையும் தங்களது காரில் கடத்திச் சென்றுள்ளனர். கார் ஓட்டுநர் சியாம்லாவின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே வந்த அரசு பேருந்தில் வந்தவர்கள் இறங்கி, கடத்திலில் ஈடுபட்ட வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை மட்டும் காருடன் பிடித்து, மேலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கடத்தல்  சம்பவம் பற்றி தகவலறிந்த மதுரை மாவட்ட எஸ்.பி  மணிவண்ணன்,  மாவட்டக் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து மதுரை , சிவகங்கை  விருதுநகர் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்.

கடத்தப்பட்ட ஜோசப்மேத்யூ செல்போன் சிக்னல் சிவகங்கை மாவட்டம் படமாத்தூரில் காட்டியதால், அங்கு சென்று காரை மட்டும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பிடிபட்ட வில்லாபுரம் கார்த்திக்கிடம் நடத்திய விசாரணையில், சினிமா பாணியில் வரைபடம் தயாரித்து, ஜோசப் மாத்யூவை பின்தொடர்ந்து கடத்தியதும், இதில் 7 பேருக்குத் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து கார், கத்தி, பல்வேறு நம்பர் பிளேட்டுகள் மற்றும் வரைபடம் ஆகியவற்றைக் காவால்துறை பறிமுதல் செய்துள்ளனர். இந்தநிலையில், தொழிலதிபர் ஜோசப் மேத்யூவை சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே தனிப்படை போலீஸார் மீட்டு, மேலூர் காவல்நிலையம் அழைத்து வருகின்றனர். போலீஸாரின் நடவடிக்கையை அடுத்து கடத்தல்காரர்கள், அவரை இறக்கிவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. ஜோசப்பின் உதவியாளர் மாத்தாயை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க