எடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியில் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை? | Twitter officials meets cm edappadi palanisamy before dmk it wing meet

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (22/07/2018)

கடைசி தொடர்பு:19:11 (23/07/2018)

எடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியில் இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை?

டெல்லியில் இருந்து சென்னை வந்த ட்விட்டர் இணையதள அதிகாரிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு தி.மு.க தகவல்தொழில்நுட்ப அணிக்கு பயிற்சி அளித்த விவகாரம் இணையதளங்களில் தி.மு.க-வினரிடையே சூடான விவாதத்தை கிளப்பியுள்ளது.

எடப்பாடியை சந்தித்துவிட்டு பயிற்சியில்  இறங்கிய ட்விட்டர் 'தலைகள்' - தி.மு.க ஐ.டி சர்ச்சை?

டெல்லியில் இருந்து சென்னை வந்த ட்விட்டர் இணையதள அதிகாரிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பிறகு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணிக்கு பயிற்சி அளித்த விவகாரம் இணையதளங்களில் தி.மு.க-வினரிடையே சூடான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தி.மு.க-வில் இளைஞரணி போன்று தகவல் தொழில்நுட்பப் பிரிவு இப்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. 'ஃபேஸ்புக், வாட்ஸ்அப்' என்று இயங்கிக் கொண்டிருந்த தி.மு.க., இப்போது ட்விட்டர் பக்கமும் கவனத்தைத் திருப்பியுள்ளது. அதிலும் '#GobackModi' என்பன போன்ற ஹேஷ்டேக் பதிவுகள் ட்ரெண்டிங் ஆனதைத் தொடர்ந்து, ட்விட்டர் குறித்த பல தொழில்நுட்பங்கள், தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஜூலை 18-ம் தேதி, தி.மு.க ஐ.டி. பிரிவு சார்பில் சென்னை சேத்துப்பட்டு அண்ணா அரங்கத்தில் தி.மு.க-வினருக்கான ஒருநாள் சமூக வலைதள பயிற்சிப் பட்டறை நடந்தது. இந்தப் பயிற்சியில் டெல்லியிலிருந்து ட்விட்டர் நிறுவனத்தின் இந்தியத் தலைமை அதிகாரிகள் மகிமா கவுல், ராச்சித் உப்பால் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினர். இப்பயிற்சியில் கலந்து கொண்ட ட்விட்டர் இந்தியா நிறுவன தலைமை அதிகாரிகள், அதற்கு முன்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து விட்டு வந்தனர். இதற்கு தி.மு.க. ஐ.டி. பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களின் எதிர்ப்பை இணைய தளங்களிலும் பதிவுகளாக வெளியிட்டிருந்தனர். 

தி.மு.க இணைய அணி கூட்டத்தில் ட்விட்டர் அதிகாரிகள், எடப்பாடி

"தி.மு.க. ஐ.டி. பிரிவுக்கு பயிற்சி பயிற்சி அளித்தவர்கள், அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவினருக்கும் பயிற்சி அளிக்க இருக்கிறார்கள். நம் கட்சி நிதி வீணாகிவிட்டது" என்று தொடங்கி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தனர். "தி.மு.க-வை எப்படி ஆட்சியில் அமரவைப்பது? அதற்காக, ட்விட்டரில் எப்படிச் செயல்படுவது போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.க. ஐ.டி. பிரிவின் துணைச் செயலாளர் தலைமையில் பயிற்சி நடத்தப்பட்டது. அதில், இரண்டு பெண்கள் கலந்துகொண்டு பயிற்சி கொடுத்தனர். அவர்கள், நமக்கு பாடம் நடத்த வரும்முன், நாம் வீழ்த்த நினைக்கும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள்.

இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியை வெற்றி பெறவைக்க, தன் உழைப்பை அளித்தவருக்கு தகவல் தொழில்நுட்ப அணி பதவி வழங்கியதன் விளைவுதான் இது..." என பொங்கியிருந்தார் தி.மு.க ஆதரவு பதிவுகளைத் தொடர்ந்து வெளியிடும் மெல்வின் பாக்யநாதன்.

இதேபோன்று பல்வேறு எதிர்ப்புப் பதிவுகள் வரிசை கட்டின. அதிலும் குறிப்பாக தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், லண்டன் சென்றிருந்த சமயத்திலும், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் தியாகராஜன் அமெரிக்காவில் இருந்த சமயத்திலும் இந்தப் பயிற்சி பட்டறை நடந்துள்ளதால் இந்த நிகழ்வு தலைமைக்கு தெரியுமா என்ற கேள்வியையும் எழுப்பினர். மேலும் "இனி தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியினர் போடும் பதிவுகளை ட்ரெண்ட் ஆக்குவதற்கு உதவமாட்டோம்" என்றும் அதிரடியாகப் பதிவிட்டனர். 

தி.மு.க இணைய அணி

தி.மு.க. ஐ.டி. பிரிவினருக்கான பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட ராஜாகுப்பம் முருகானந்தம் என்பவர், அதுபோன்ற எதிர்ப்புகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அதில், "தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் நடைபெற்ற சமூக வலைதள பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியைப் பற்றி நண்பர்கள் பலர், பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இதில் அனைவரும் ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர். அந்தச் செயல் பலருக்கு பலவிதத்தில் வருத்தத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ட்விட்டர் நிறுவன அதிகாரிகள் இருவரும், ஒரு நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள். அவர்களால் எந்தவொரு தனிப்பட்ட கட்சியையோ அல்லது தனிப்பட்ட நபரையோ முன்னிலைப்படுத்த முடியாது. அவர்களால் எந்த தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவும் பிரசாரம் செய்யவும் முடியாது. அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்ததே, தி.மு.க. தலைவர் கருணாநிதி அல்லது செயல் தலைவர் மு.க. ஸ்டாலினையும், அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் ஆட்சியில் உள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்திப்பதற்காகத்தான்.

மேலும் அவர்களின் வருகையைப் பயன்படுத்தி, தி.மு.க-வின் 89 எம்.எல்.ஏ-களுக்கும் ட்விட்டர் பற்றிய பயிற்சி அளிப்பதுதான் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் திட்டம். மாறாக, செயல் தலைவர் ஸ்டாலின், ஐ.டி. பிரிவு செயலாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால், எம்.எல்.ஏ-க்களுக்கான பயிற்சித் திட்டம் நடத்த முடியாமல் போய் விட்டது. சென்னையில் கட்சியின் ஐ.டி. பிரிவினருக்கு பயிற்சிப் பட்டறையை ஐ.டி. பிரிவின் துணைச் செயலாளர் இசை, தியாகராஜனிடம் ஒப்புதல் பெற்று நடத்தி முடித்தார். இதனால் நம் கட்சியின் ரகசியமோ அல்லது நம் தலைமையின் தேர்தல் வியூகமோ வெளியே தெரிவதற்கான வாய்ப்பேதும் இல்லை. முழுக்க முழுக்க ட்விட்டர் பயன்பாடு பற்றி மட்டுமே விளக்கினார்கள்" என தெரிவித்திருந்தார்.

இந்த பயிற்சியை முன்னின்று நடத்திய இசை, "அரசின் துறைகள் சம்பந்தமான ட்விட்டர் தளங்களை உருவாக்குவதற்காக டெல்லியில் இருந்து அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சென்னை வந்திருந்தார்கள். அரசு மற்றும் அரசியல் கட்சியினரிடம் உறவை மேம்படுத்துவதுதான் அவர்களின் முக்கியப் பணி. ட்விட்டர் என்பது அனைவருக்கும் பொதுவான நிறுவனம். அதன் அடிப்படையிலேயே அந்தப் பயிற்சி அமைந்தது. யார் அழைத்தாலும் அவர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த அடிப்படை புரிதல் இல்லாததால், சிலர் வேண்டுமென்றே சில பதிவுகளைப் போட்டிருந்தனர். ட்விட்டர் நிறுவனத்தின் பணி என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தப் பிரச்னை ஏற்பட்டிருக்காது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்