தமிழகத்தில் சரியான ஆட்சி நடைபெறவில்லை! விளாசும் ஸ்ரீபிரியா

தமிழகத்தில் சரியான ஆட்சி நடைபெறவில்லை என மக்கள் நீதிமய்யத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீபிரியா குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஸ்ரீபிரியா

கடலூரில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிமுக ஆலோசனைக் கூட்டம் கடலூர் நகர அரங்கில் நடந்தது. இதில் மக்கள் நீதி மையத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை ஸ்ரீபிரியா கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``தமிழகத்தில் தற்பொழுது ஊழல் ஆட்சி நடந்து வருகிறது. சரியான ஆட்சி நடைபெறவில்லை. தமிழகத்தில் போதை பொருள்கள் அதிகமாகி வருகிறது. இதனால், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். சரியான ஆட்சி நடந்தால் போதைப்பொருட்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். சரியான ஆட்சி நடைபெறவில்லை என்பதைதான் இது காட்டுகிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளைக் கற்றுக்கொடுக்காமல் ஆண்களுக்கும், பெண்களை மதிக்க வேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து ஒருவர் நல்லவிதமாக தொடுகிறாரா? அல்லது கெட்ட எண்ணத்தோடு தொடுகிறாரா? என தாய்தான், அதன் வித்தியாசத்தை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். பெண் குழந்தைகள் ஒருவர் தவறான நோக்கத்தோடு தொட்டாலும், தப்பாகப் பேசினாலும், அதனைத் தைரியமாக பெற்றோர்களிடம் கூற வேண்டும்; பயப்படக் கூடாது. பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தாய் மட்டுமே. எனவே, தாயிடம் எதையும் மறைக்க வேண்டாம். பாலியல் வன்கொடுமை குறித்து மக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்’’. இவ்வாறு அவர் கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!