`என்னைப் பற்றி மீம்ஸ் போடுவது மகிழ்ச்சிதான்!’ - அமைச்சர் செல்லூர் ராஜூ கலகல | Minister Sellur Raju speaks about various issues in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 19:07 (22/07/2018)

கடைசி தொடர்பு:19:07 (22/07/2018)

`என்னைப் பற்றி மீம்ஸ் போடுவது மகிழ்ச்சிதான்!’ - அமைச்சர் செல்லூர் ராஜூ கலகல

கோயும்புத்தூருக்கு, கோயம்புத்தூர்கார்களை கேட்டுத்தான் செய்கிறோம் என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

செல்லூர் ராஜூ

கோவை ஒண்டிப்புதூரில், கூட்டுறவு சிந்தாமணி திருமண மண்டபத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கிவைத்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ, "கோவை மண்டலத்தில் இயங்கும் சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையில் இரண்டு மண்டபம் மற்றும் ஒரு மினி ஹால் திறக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகுதான், சிந்தாமணி கூட்டுறவு சங்கம் 1 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி மூலம் புனரமைக்கப்பட்டுள்ளது. எப்பவும் கோயம்புத்தூருக்கு, நாங்களே கோயம்புத்தூர்காரர்களைக் கேட்டுத்தான் செய்கிறோம். தலைவர்தான் (எஸ்.பி.வேலுமணி) எங்களுக்கு தண்ணீர் கொடுத்து இருக்கிறார். தற்போதும், கோயம்புத்தூர்  மண்டலத்தின் அனுமதி பெற்றுத்தான் நாங்கள் செய்கிறோம். கூட்டுறவு சங்கத் தேர்தல் காரணமாக, காலிப் பணியிடங்கள் நிரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டது. கூட்டுறவு சங்கங்களுக்கும், பொதுவிநியோக திட்டங்கள் காலிபணியிடங்களுக்கும் அதிவிரைவில் பணியாளர் தேர்வு நடைபெறும்.

தனித்துவ மாநில சுயாட்சிக்கு குரல் கொடுப்பதுதான் தமிழ்நாடு. மத்தியில் ஆளும் கட்சியுடன் இணக்கமாகச் சென்று, தமிழக மக்களுக்கு தேவையான நிதித் திட்டம் பெறும் சூழலில் உள்ளோம். தி.மு.க என்று ஒருகட்சி  இல்லாத அளவில் உள்ளது. என்னதான் டெல்லிக்கு ராஜா என்றாலும் இங்கு எப்படி என்பதை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்?. தமிழகத்தை மாநிலக் கட்சிதான் ஆளும். என்னைப் பற்றி மீம்ஸ் போடுவது ஜாலிதான். மீண்டும் நாங்கள்தான் ஆளும் கட்சியாக வருவோம். கூட்டம் கூட்டுவது முக்கியமல்ல; அவர்கள் ஓட்டுப் போடவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத்தான், எதிரிகள் அரசை குறை சொல்கின்றனர்.

36 நாள்கள் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் என்ன சாதித்தன?. அ.தி.மு.க மீது ஒரு குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. எஸ்.பி.வேலுமணி.மீது கூட குற்றம்சாட்டினர். ஆனால், அமைச்சர் விளக்கம் அளித்ததும், தி.மு.க-வினர்  வாய் மூடிவிட்டனர். தி.மு.க-வினர் வெளியில் புலி, சட்டமன்றத்தில் எலி. 8 வழிச் சாலை பயனுள்ளது என்பதற்காகவே அமைச்சர் உதயகுமார் அதைப் பிடிக்கவில்லை என்றால் பூட்டு போடலாம் எனக் கூறியுள்ளார்" என்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.