2019 தேர்தலுக்கு தினகரனின் ஸ்கெட்ச்... தொகுதி பொறுப்பாளர்கள் ரெடி! | ttv dinakaran preparations on 2019 lok sabha election

வெளியிடப்பட்ட நேரம்: 20:21 (22/07/2018)

கடைசி தொடர்பு:20:21 (22/07/2018)

2019 தேர்தலுக்கு தினகரனின் ஸ்கெட்ச்... தொகுதி பொறுப்பாளர்கள் ரெடி!

2019 தேர்தலுக்கு தினகரனின் ஸ்கெட்ச்... தொகுதி பொறுப்பாளர்கள் ரெடி!

அடுத்த வருடம் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது. அதற்கான தேர்தல் வேலைகளை கவனிக்க அரசியல் கட்சிகள் அனைத்தும் களத்தில் இறங்கிவிட்டன. அந்த வகையில் டி.டி.வி. தினகரன் தரப்பும் களத்தில் குதித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மொத்தமாக இருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளை ஆறு மண்டலங்களாக பிரித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன். மண்டல பொறுப்பாளர்களாக ஆறு சீனியர்களை நியமித்திருக்கிறார் அவர். இவர்களைத்தவிர, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் அதிகபட்சம் மூன்று பேர் என்கிற வகையில், நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் தினகரன்.  

தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் ஒளிபரப்பாகும் விவாதம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பங்குபெறுவோரின் அதிகாரப்பூர்வ பட்டியலையும்  தினகரன் வெளியிட்டுளார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தங்கதமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், பெங்களூரு புகழேந்தி, தாம்பரம் நாராயணன், சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட 20 பேரை மட்டுமே தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார் தினகரன். 'இத்தனை பேரா?' என்று ஆச்சரியப்படுகின்றன மீடியாக்கள். 

தினகரன்

கடந்த ஒரு மாதமாக, தினகரன் அவரது கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார். அவர்கள் சொன்ன விவரங்களை மனதில் வைத்து, பொறுப்பாளர்கள் பட்டியலை தயாரித்து முடித்தார். அந்த பட்டியலைதான் தற்போது தினகரன் வெளியிட்டுள்ளார். தினகரனின் இந்த திடீர் அறிவிப்பு அ.தி.மு.க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. காரணம், தொலைக்காட்சிகளில் பங்கெடுக்க இத்தனை பேரை, அதுவும் முழுக்க முழுக்க சீனியர்களை எந்த அரசியல் கட்சியும் இதுவரை நியமித்ததாகத் தெரியவில்லை. அதேபோல், நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களை நியமித்த விஷயத்திலும் தாராள போக்கை கையாண்டிருக்கிறார் தினகரன். ஒரு தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரை நியமிப்பதுதான் கட்சிகளின் வழக்கம். அந்த சம்பிரதாயத்தை தற்போது மாற்றிவிட்டார் தினகரன். 'தேர்தல் வேலைகளில் வீண் குழப்பத்தை ஏற்படுத்தும்வகையில் மூன்று பொறுப்பாளர்களை ஒரு தொகுதிக்கு நியமித்திருக்கிறார். ஏற்கெனவே, கட்சியில் உள்ள கோஷ்டிகளை திருப்திபடுத்தும் வகையில் தினகரன் இப்படி செய்திருக்கிறார்'  என்கிற பேச்சு கட்சியினர் மத்தியில் கிளம்பியுள்ளது.  

இதுபற்றி அ.ம.மு.கவின் முக்கியத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, "தினகரன் பிராக்ட்டிக்கலாக தொகுதி பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார். ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் ஆறு சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு  மாவட்டங்களில் இடம்பெறுகின்றன. இங்குபோய் ஒருவர் தலைமையில் தேர்தல் வேலை செய்யச் சொன்னால் எப்படி? இந்த தவறைதான் இதுவரை தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் செய்து வந்தன. அதைப் புரிந்துகொண்டு, நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் மாவட்டச் செயலாளர்கள் அனைவரையும் குழுவில் சேர்த்திருக்கிறார். உதாரணத்துக்கு, திருச்சி நாடாளுமன்றத்தை எடுத்துக்கொண்டால், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்கள் வருகின்றன. அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் பெயர்களையும் ஒரே தொகுதியில் போட்டுள்ளார் தினகரன். அவர்களுடன் உத்தேசமாக யாரை நிறுத்தலாம்? என்பதை இப்போதே முடிவு செய்து, அவர்களில் இருவரையும் இந்தக் குழுவில் இணைத்துவிட்டிருக்கிறார். இவர்கள் இப்போதிலிருந்தே தேர்தல் வேலைகளை கவனிக்கவேண்டும் என்பது தினகரனின் எதிர்பார்ப்பு. இந்த இரண்டு காரணங்களில் தேர்தல் பணி செய்கிறவர்களின் லிஸ்ட் நீண்டுவிட்டது. வேறு ஏதும் உள்நோக்கம் இல்லை", என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close