வெளியிடப்பட்ட நேரம்: 02:34 (23/07/2018)

கடைசி தொடர்பு:02:34 (23/07/2018)

அருவியில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு!

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் மர்ம கும்பல் நகை பறித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணிமுத்தாறு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவி உள்ளது. இந்த அருவியில் தண்ணீர் வரத்து அதிகம் இருந்ததாலும் அருவியில் குளிக்கும் பகுதியில் போதிய வசதிகள் இல்லாத நிலையில், அங்கு குளிக்க அனுமதித்தால் பயணிகள் அருகில் உள்ள தடாகத்தில் விழும் ஆபத்து இருந்ததால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில், அருவியில் வெள்ளம் குறைந்ததால் கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று  விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில், அங்கு குளித்துக் கொண்டிருந்த பெரியபட்டணத்தைச் சேர்ந்த பாத்திமா என்பவரது கழுத்தில் கிடந்த 10 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். 

அருவியில் உள்ள கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இந்த திருட்டு நடந்துள்ளது. திருட்டுப் போன நகையின் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது. மணிமுத்தாறு அருவிப் பகுதியில் போதுமான அளவுக்கு காவலர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள விடுமுறை தினங்களிலாவது காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதே சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.