வெளியிடப்பட்ட நேரம்: 03:07 (23/07/2018)

கடைசி தொடர்பு:03:07 (23/07/2018)

`மக்கள் பொறுமை இழந்தால் இந்த ஆட்சியையே தூக்கி வீசிவிடுவார்கள்!' - கனிமொழி காட்டம்

“நாம் நினைத்ததை நிறைவேற்றி விடலாம் என மக்களையும் மக்களின் போராட்டங்களையும் ஒடுக்கி வருகிறது தற்போதைய அரசு. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தால், மக்களே இந்த இந்த ஆட்சியை தூக்கி வீசிவிடுவார்கள். இப்படி மக்களால் தூக்கி வீசப்பட்ட அரசுகள் எத்தனையோ உள்ளது” என தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

கனிமொழி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, மக்கள் விசாரணைக்குழு அறிக்கையை பாதிக்கப்பட்டவர்களிடம் அர்பணித்து உறுதி ஏற்புக் கூடுகை நிகழ்ச்சி தூத்துக்குடி நற்செய்தி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சித் துவக்கத்தில் உயிரிழந்த 13 பேர் மற்றும் தடியடியில் உயிரிழந்த பாரத் மற்றும் அரசுப் பேருந்து தீ வைப்பில் உயிரிழந்த வள்ளியம்மாள் என 15 பேரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், ஆய்வு அறிக்கையை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கனிமொழி மற்றும் ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கோபால கெளடா, நல்லக்கண்ணு ஆகியோர் அளித்தனர். 

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இந் நிகழ்ச்சியில் பேசிய எம்.பி., கனிமொழி, ” ஜனநாயத்திற்காக முதல் குரல் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடாக இருந்து வந்தது. ஆனால், தற்போது அப்படி இல்லை. மாசு இல்லாத காற்று வேண்டும், மாசு இல்லாத சுற்றுச்சூழல் வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள கிராமங்களைச் சார்ந்த மக்கள் 100 நாள்களாக அமைதியான வழியில் போராடி வந்தனர். அரசு சார்பில் எவ்விதப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. நூறாவது நாள் போராட்டத்தில் கலவரம் வெடிக்கும் என முன்கூட்டியே நீதிமன்றத்தில் தெரிவித்துதான் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. கலவரம் நடக்கும் என முன்கூட்டியே ஆலைத் தரப்பினருக்கு தெரிந்தது எப்படி?.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் 

மக்களுக்கு பேசும் உரிமை இல்லை, கருத்துச் சொல்லும் உரிமை இல்லை. மக்களின் கோரிக்கைகள் எதனையுமே அரசு ஏற்கவில்லை. துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார் என்பது தெரிய வேண்டும். இதில், அப்பாவிகள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பங்களுக்கு என்ன ஆறுதல் சொல்லுவது என்றே தெரியவில்லை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டங்களில் மக்கள் மீதான தாக்குதலை காவல்துறை மூலம் நடத்தி உள்ளது அரசு. அதேபோலத்தான் தற்போது சேலம் – சென்னை 8 வழி பசுமைச்சாலை விவகாரத்திலும் மக்கள் மீது தாக்குதல்தான் நடக்கிறது. நாம் நினைத்தது எல்லாவற்றையும் நடத்தி விடலாம் என தற்போதைய அரசின் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அதற்காக மக்களையும் மக்களின் போராட்டங்களையும் ஒடுக்க நினைக்கிறார்கள். மக்களை இந்த அரசு அடக்க, அடக்க மீண்டும் மக்கள் எழுந்து போராட வருவார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தால் மக்களே இந்த ஆட்சியை தூக்கி வீசி விடுவார்கள்”என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க