பொறியியல் கலந்தாய்வுக்காக காத்திருந்த மாணவனுக்கு அமராவதி ஆற்றில் நடந்த சோகம்!

 

 அமராவதி

கரூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்திருந்த ஹரி என்ற மாணவன் ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கரூர் நகரத்தை ஒட்டி ஓடும் அமராவதி ஆற்றில் செல்லாண்டிபாளையம் அருகே தனது நண்பர்களோடு குளித்திருக்கிறார்  ஹரி என்ற மாணவன். இவர் 12-ம்  வகுப்பு முடித்துவிட்டு, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், அமராவதி ஆற்றில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் வந்ததால், அதில் நண்பர்களோடு போய் குளித்திருக்கிறார். அப்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட, அங்கே குளித்த சக நண்பர்கள் கூக்குரல் எழுப்பினர். தகவல் அறிந்து வந்த ஹரியின் பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் ஹரியை தண்ணீரில் தேடி இருக்கிறார்கள். இந்த தகவல் கரூர் கலெக்டர் அன்பழகனுக்குப் போக, அவரும் அதிகாரிகளோடு அங்கே விரைந்தார். அமராவதி ஆற்றில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவன் ஹரியைத் தேட தீயணைப்புத்துறை வீரர்களை முடுக்கிவிட்டு, மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். 

பின்னர் மக்களிடம் பேசிய கலெக்டர், ``செல்லாண்டிபாளையத்தைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஹரி இன்று குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடுதலாகத் தனியார் குழுக்களை வைத்துத் தேடவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது அதீத கண்காணிப்பு கொள்ள வேண்டும். காவிரி, அமராவதியில் தண்ணீர் அதிகம் வந்துகொண்டிருப்பதால், குளிக்க அனுமதிக்கக்கூடாது. விடுமுறை நாள்களில் காவல்துறை மூலம் குளிக்கும் இடங்களில் கண்காணிக்கப்படும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!