வெளியிடப்பட்ட நேரம்: 06:36 (23/07/2018)

கடைசி தொடர்பு:07:24 (23/07/2018)

கோவையில் மகாராஜனை கடத்தியது யார்? - பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை!

போலீஸ் மகராஜன்

கேரள போலீஸாரால் கைது செய்யப்பட்டு கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னைவாசி ஒருவர் கோவையில் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரின் மகன் மகாராஜன் (43). பைனான்சியரான இவர் பெரிய அளவில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வருபவர். மகாராஜனிடம் கேரள மாநிலம் பள்ளந்தட்டி பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் ரூபாய் 45 லட்சம்  கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜேக்கப் வாங்கிய கடனுக்காக தன்னுடைய வோல்வோ காரை மகாராஜனிடம் அடமானமாகக் கொடுத்துள்ளார் ஜேக்கப். இந்தச் சூழலில்  குறிப்பிட்ட நாள்களுக்குள்ளாக வாங்கிய தொகையை ஜேக்கப் முழுமையாகத் திருப்பி செலுத்தியிருக்கிறார். அதன்பிறகுதான் ஜேக்கப்புக்கு மகாராஜன் செக் வைத்துள்ளார். ஜேக்கப் கொடுத்த வோல்வோ காரை திரும்பத்தராமல் ஏமாற்ற முயன்றிருக்கிறார் மகாராஜன். உடனே போலீஸுக்குப் போய்விட்டார் ஜேக்கப்.

புகார் கொடுக்கப்பட்ட கேரளாவின் எர்ணாகுளம் காவல் நிலையத்திலிருந்து ஒரு உதவி ஆய்வாளர், மூன்று கான்ஸ்டபிள் என நான்குபேர் கொண்ட குழு மகாராஜனை தேடி சென்னை விரைந்தது. நேற்று முன்தினம் மாலை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வைத்து மகாராஜனை வளைத்தது கேரள போலீஸ். பின்னர் கைது செய்து கேரளாவுக்கு அழைத்து வந்துள்ளனர். 

கேரள போலீஸ், மகாராஜனை அழைத்துக்கொண்டு வந்த கார் நேற்று இரவு 11 மணிக்குக் கோவையை அடுத்து உள்ள கணியூர் டோல்-கேட்-ஐ நெருங்கியபோதுதான் அந்த த்ரில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் தயாராக இருந்த சுமார் 30 மேற்பட்ட நபர்கள் அடங்கிய கும்பல் கேரள போலீஸார் வந்த காரை மறித்து, போலீஸாரை தாக்கிவிட்டு மகாராஜனை கடத்திச் சென்றுவிட்டதாக சொல்லியிருக்கிறது கேரள காவல்துறை. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த பாலக்காடு காவல் உதவி கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார்  சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பிறகு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கருமத்தம்பட்டி போலீஸார் விசாரணையை முடுக்கியிருக்கிறார்கள். மகாராஜனை கடத்தியது அவர் ஆதரவாளர்களா? அல்லது வேறு யாரேனுமா? கேரள போலீஸ் சொல்வது உண்மைதானா? என்ற பல கோணங்களில் பயணிக்கிறது இந்த வழக்கு விசாரணை.