குளிக்கும் ஆசையில் சென்ற அண்ணன்- தம்பி உயிரிழப்பு! தந்தைக்கு நேரில் ஆறுதல் கூறிய கலெக்டர்

மதுரை மாவட்ட கலெக்டர், குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

 

மேலூர் அருகே தனியார் கிரானைட் குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். 8 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு உடல்கள் மீட்கப்பட்டன. மதுரை மாவட்ட ஆட்சியர் இரவில் குடும்பத்தினருக்கு நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீளவளவு, கீழையூர் பகுதியில் அதிக அளவு குவாரிகள் உள்ளன. சட்டத்துக்குப் புறம்பாக குவாரி கற்களை வெட்டி எடுப்பதாக குவாரிகள் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், குவாரி பள்ளங்களில் மழை நீர் தேங்குவது வழக்கம். இதில் அருகில் உள்ளவர்கள் குவாரி பள்ளங்களில் குளிப்பது, துணி துவைப்பது, விளையாடுவது  என ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, மேலூர் வெள்ளநாதன்பட்டியைச் சேர்ந்த சகோதரர்களான சதாம் உசேன் மற்றும் சலீம் மற்றும் அவரின் நண்பர் அஷ்ரத் அகமது ஆகியோர் குவாரி பள்ளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது சதாம் உசேனுக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளார். அவரைக் காப்பாற்ற அவரின் தம்பி சலீமும் போராடியபோது அவரும் நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட அவர்களது நண்பர் அஷ்ரத் அகமது அருகே இருந்த நபர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால், அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. அவர்களது உடலை தீயணைப்புத் துறையினர் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் சுமார் 8 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்த இரண்டு சகோதரர்களின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் இரவில் சம்பவ இடத்துக்கே வந்து பார்வையிட்டார். பின்னர் குடும்பத்தினரிடம் ஆறுதல் தெரிவித்துச் சென்றார் . இந்த சம்பவம் குறித்து கீழவளவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். `இது போன்ற சம்பவம் இனி நடைபெற கூடாது. அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!