நம்பவைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காதலன்! உடந்தையான 4 பேர் சிக்கினர்

கஞ்சா கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 5 பேரை புதுச்சேரி போலீஸ் கைது செய்திருக்கிறது.

 பாலியல் வன்கொடுமை

சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்ளாகவே புதுச்சேரியில் அதேபோல மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ரம்யா (பெயர் மாற்றம்). இவர் புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அதற்காக தினமும் பேருந்தில் சென்று வருவார். அப்போது வழுதாவூர் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற 19 வயது இளைஞன் ரம்யாவுடன் நட்பாகப் பழகியிருக்கிறார். சிறிது நாள்களிலேயே ரம்யாவைக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறி அவரை நம்ப வைத்திருக்கிறார். ரம்யாவை புதுச்சேரி, திருக்கனூர் பகுதியில் உள்ள ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்ற விக்கி, அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை தனது மொபைல் போனில் வீடியோவும் எடுத்திருக்கிறார்.

அதை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி ரம்யாவை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரம்யாவை அடைத்து வைத்த விக்கி அவருக்கு குளிர்பானத்தில், மயக்க மருந்து மற்றும் கஞ்சா போன்றவைகளைக் கொடுத்து தனது நண்பர்களுடன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அங்கிருந்து தப்பித்து ஓடிவந்த ரம்யா தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் நடந்தவற்றைக் கூறி கதறியிருக்கிறார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்த குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் விக்கி மற்றும் அவரின் நண்பர்கள் 8 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் நேற்று விக்கி, கண்ணதாசன், முகிலனுடன் 18 வயதுக்குட்பட்ட இருவர் என 5 பேரை போலீஸ் கைது செய்தது. தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை புதுச்சேரி போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!