`ரெய்டு குறித்து நடவடிக்கை இல்லையென்றால் வழக்கு தொடர்வோம்' - ஆளுநரைச் சந்தித்த மு.க.ஸ்டாலின்!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்துப் பேசினார். 

ஸ்டாலின்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு ஒப்பந்தப் புள்ளிகள் அடிப்படையில் முட்டைகளை வழங்கி வரும் கிறிஸ்டி ஃபிரைடு நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். சுமார் 1,350 கோடி ரூபாய் அளவில் வரி ஏய்ப்பில் கிறிஸ்டி நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையின் முதல்நிலை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், எஸ்.பி.கே நிறுவனர் செய்யாதுரைக்குச் சொந்தமான இடங்களிலிருந்து கட்டுக்கட்டாக பணம், நகைகள் கைப்பற்றப்பட்டன. 

இந்த இரு சோதனைகளும் தமிழக அரசுக்கு தலைவலியாக உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த இரு நிறுவனங்களின் ஊழலுக்கு முக்கிய காரணியாக ஆளுங்கட்சிப் பிரமுகர்களை கைகாட்டினர். குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மீதே கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கவர்னரிடம் கிறிஸ்டி மற்றும் எஸ்.பி.கே நிறுவனங்களில் நடந்த வருமான வரிச் சோதனை குறித்த புகார் மனு ஒன்றையும் ஸ்டாலின் அளித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ``வருமான வரித்துறை சோதனை குறித்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். இது தவிர மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் தமிழக அரசுக்கு ஒதுக்கியுள்ளது. இந்த நிதிகளில் முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர். இதுகுறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. எங்களது புகார் மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதிகூறியுள்ளார். ரெய்டு குறித்து முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். தி.மு.க ஆட்சிக்காலத்தில் எந்த சம்பந்திக்கும் உறவினர்களுக்கும் கான்டராக்ட் கொடுக்கப்படவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது முற்றிலும் பொய். சேகர் ரெட்டி மற்றும் குட்கா ரெய்டு, ஆர்.கே.நகர் தேர்தல் ரெய்டு போன்ற ரெய்டுகளில் எந்த நடவடிக்கையும் இல்லை" எனக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!