வெளியிடப்பட்ட நேரம்: 14:14 (23/07/2018)

கடைசி தொடர்பு:16:27 (23/07/2018)

`விடுமுறை நாள்களில் பற்றி எரிந்த பள்ளிக்கூடம்'- சிக்கிக்கொண்ட வாலிபர் அதிர்ச்சி வாக்குமூலம்

பள்ளிக்கூடத்துக்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர்

சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை நாள்களில் 'தீ' வைக்கப்பட்டு வந்த சம்பவத்தில் இருந்த மர்மம் நேற்று விலகியிருக்கிறது. பள்ளிக்கு  தீ வைத்த நபரை  சூலூர் காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், அவர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர வைத்துள்ளது.

கோவையை அடுத்த சூலூரில் செயல்பட்டுவருகிறது சூலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் அந்தப் பள்ளியில் மர்மமான முறையில் தீப்பற்றி எரிவதாக திகில் புகார் கிளம்பியது. அப்படி மர்மமான முறையில் பரவும் தீயால் பள்ளியில் உள்ள பொருள்களெல்லாம் எரிந்து நாசமாகிவிட்டதாகவும் இதுதொடர்பாக சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் பிரயோஜனம் இல்லை என்று கதறினார்கள் அந்தப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

இந்தப் பகீர் சம்பவத்தால் பள்ளிக்குப் பாதுகாப்பு வழங்கக்கோரி பள்ளி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து  மனு கொடுத்தார்கள். அப்போது அவர்களிடம் பேசியபோது, 'பள்ளிக்கூடத்துக்குப் பிள்ளைங்களை அனுப்புறதுக்கே பயமா இருக்குங்க. மூணு வாரமா இந்த அசம்பாவிதம் நடந்துட்டு இருக்கு. அதுவும் லீவ் நாள்லதான் இது நடக்குது. யாரோதான் வேணும்னே இப்படிப் பண்றாங்க. யார்னு எங்களால கண்டுபிடிக்க முடியல. 

வெளில சொன்னா யாராச்சும் பள்ளிக்கூடத்துக்கு தீ வைப்பாங்களான்னும் கேக்குறாங்க. ஏதோ, எங்கயோ தப்பு நடக்குது. அதை கண்டுபிடிக்க வேண்டிய போலீஸும் கண்டுக்காம இருக்காங்க. அரசுப் பள்ளிங்கிறதாலதானே இப்டி அசால்ட்டா இருக்காங்க. இந்த சம்பவத்தில் பள்ளியில் உள்ள பொருள்களெல்லாம் எரிஞ்சு நாசமா போச்சு. கலெக்டர்தான் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து எங்க பள்ளிக்கூடத்தைக் காப்பாற்றணும்' என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.

அதன்பிறகு, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தது சூலூர் போலீஸ், விசாரணையின் முடிவில் அந்தப் பள்ளிக்கு தீ வைத்தது சூலூர் கோபால் பிள்ளையார் கோயில் வீதியைச்  சேர்ந்த முருகானந்தம் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (25) என்பதை கண்டுபிடித்து நேற்று அவரைக் கைது செய்துள்ளது. சதீஷ்குமார் போலீஸிடம் அளித்த வாக்குமூலம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'விடுமுறை நாள்களில் அந்தப் பள்ளியில் தப்பு நடக்கிறது. அதைத் தடுக்க கண்காணிப்புக் கேமரா பொருத்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகதான் பள்ளிக்கூடத்துக்கு தீ வைத்தேன்'' என்றுகூறியுள்ளார்.

சதீஷ்குமார் சொன்னது உண்மையா? என்று விசாரித்து வருகிறது சூலூர் போலீஸ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க